ஜெயின் பண்டிகைக்காக 10 நாட்கள் இறைச்சி கடைகளை மூட அவசியம் இல்லை - ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

மகாவீர் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி அன்று இறைச்சிக்கடைகள் மூடப்படுவதால், ‘பர்யஷன்’ என்ற ஜெயின் மதப்பண்டிகைக்காக 10 நாட்கள் இறைச்சிக்கடைகளை மூட வேண்டிய அவசியம் இல்லை என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

Update: 2020-08-18 21:30 GMT
சென்னை,

மதுரை வடஇந்தியர் நலச்சங்கத்தின் தலைவர் ஹூக்கம்சிங் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “ஜெயின் பண்டிகையான ‘பர்யஷன்’ பண்டிகை தற்போது கடந்த 15-ந் தேதி முதல் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த 10 நாட்களிலும், விநாயகர் சதுர்த்தி அன்றும், தமிழகத்தில் இறைச்சி கூடங்கள், இறைச்சிக்கடைகள், மதுபானக் கடைகள் ஆகியவற்றை மூடும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை கடந்த 14-ந்தேதி விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, “டாஸ்மாக்” மதுக்கடை மூடுவது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது. மதுக்கடையை 10 நாட்கள் மூட முடியாது. அதேநேரம், விலங்குகள் நலவாரியம் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந்தேதி மத ரீதியான திருவிழா காலங்களில் இறைச்சிக்கூடங்கள், இறைச்சிக்கடைகள் மூட வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ந்தேதி திரும்ப பெற்று விட்டது. அந்த விவரத்தை மனுதாரர் தெரிவிக்காமல், ஆகஸ்டு 6-ந்தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். எனவே இதை ஏற்க முடியாது. மேலும் மகாவீரர் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி அன்று இறைச்சிக்கூடம், இறைச்சிக்கடை மூடப்படுவதால், ‘பர்யஷன்’ பண்டிகைக்காக 10 நாட்கள் இவற்றை மூடவேண்டிய அவசியம் இல்லை” என்று வாதிட்டார். இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பிப்பதாக கூறினர்.

மேலும் செய்திகள்