தமிழகத்தில் புதிதாக 6,352 பேருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதார துறை தகவல்

தமிழகத்தில் புதிதாக 6,352 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2020-08-29 13:05 GMT
சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை, பரிசோதனை எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,

தமிழகத்தில் மேலும் 6 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு  உள்ளது.  சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,067 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 87 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 59 பேர், தனியார் மருத்துவமனைகளில் 28 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் வேறு நோய் பாதிப்பு இல்லாத 5 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,137 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 2,712 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,49,682-ல் இருந்து 3,55,727 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,285 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,33,173 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று 6,045 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,55,727 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 80,988 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 46,54,797 ஆக உள்ளது. மேலும், தற்போது 52,726 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்