கொரோனா முடிந்து இயல்பு நிலை திரும்பும் வரை வீட்டுக்கடன் வசூலிப்பதை வங்கிகள் ஒத்திவைக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

கொரோனா முடிந்து இயல்பு நிலை திரும்பும் வரை வீட்டுக்கடன் வசூலிப்பதை வங்கிகள் ஒத்திவைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-08-30 22:39 GMT
சென்னை,

தஞ்சாவூர் அருகே, வல்லத்தில் தனியார் வங்கியில் வாங்கிய வீட்டுக்கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்காததால், வங்கிக் கிளை முன்பு ஆனந்த் என்ற இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி நெஞ்சை உலுக்குகிறது. கொரோனா மற்றும் ஊரடங்கு காலத்தில் வேலையிழந்து தவிக்கும் மக்கள் தாங்கள் வாங்கிய கடனை கட்ட முடியாத காரணத்தினால் நுண்நிதி நிறுவனங்கள் அடியாட்களை வைத்து மிரட்டி வட்டிக்கு மேல் வட்டி செலுத்த வேண்டுமென நிர்ப்பந்திக்கின்றனர். இதுபோன்ற கொடுமைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் கண்ணைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்து வரும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, ஆனந்தை தற்கொலைக்கு தூண்டிய சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். கொரோனா முடிந்து இயல்பு நிலை திரும்புகிற வரை நுண்நிதி கடன், சுயஉதவி குழு கடன், இ.எம்.ஐ., கிரெடிட் கார்டு கடன் தவணை, வீட்டுக்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன் வசூலையும் ஒத்திவைக்க வேண்டும். மேலும் இக்காலத்திற்கான வட்டித்தொகையினையும் ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்