முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு; முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் இரங்கல்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Update: 2020-08-31 16:28 GMT
சென்னை,

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 10ந்தேதி உடல்நல குறைவால் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஆபரேஷன் செய்து அகற்றப்பட்டது.

ஆனால் அதன்பின் அவரது உடல்நிலை மோசமடைந்தது.  நுரையீரல் தொற்று ஏற்பட்ட நிலையில், ஆழ்ந்த கோமா நிலையிலேயே இருந்த பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையை மருத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வந்தது.

இவற்றுக்கிடையே கொரோனா பாதிப்புக்கும் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.  அவருக்கு வயது 84.  அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

குடியரசு தலைவர், நிதி, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சராக திறம்பட செயலாற்றியவர் பிரணாப் என முதல் அமைச்சர் பழனிசாமி புகழாரம் தெரிவித்துள்ளார்.

தேசத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மாற்று கட்சியினரும் தவிர்க்க முடியாத ராஜதந்திரியை இந்தியா இழந்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜி மறைவு இந்திய அரசியலுக்கு மிகப்பெரிய இழப்பு என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜி மறைவு இந்தியாவிற்கும், காங்கிரசுக்கும் மிகப்பெரிய இழப்பு என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சிறந்த அரசியல் தலைவரை இந்த நாடு இழந்து இருக்கிறது என தி.மு.க.வின் மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜி மறைவு இந்திய நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என த.மா.கா. தலைவர் வாசன் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜி மறைவு:  அ.தி.மு.க. சார்பில் வீர வணக்கத்தை தெரிவிக்கிறோம் என வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜியின் மறைவு இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்