வெளிநாடு, வெளிமாநிலங்களில் உள்ள மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் எழுத பரிசீலிக்கப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

வெளிநாடு, வெளிமாநிலங்களில் உள்ள மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் எழுத பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-04 02:06 GMT
சென்னை, 

கொரோனா நோய்த் தொற்று காரணமாக கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை தவிர, பிற செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டு, அதற்கு மதிப்பெண் வழங்கி தேர்வு முடிவும் வெளியானது. இந்த நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வை நடத்துவது குறித்த அறிவிப்பை கடந்த 1-ந்தேதி உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்.

அதில் இறுதி செமஸ்டர் தேர்வை மாணவர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய தேர்வாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார். சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருப்பதால் அவர்கள் எப்படி நேரில் வந்து தேர்வு எழுத முடியும் என்ற கேள்வி எழுந்தது. 

இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

இறுதி பருவத்தேர்வை எழுத உள்ள பல்கலைக்கழக, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்தால் அவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுத அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். மற்ற மாணவர்கள் அனைவரும் நேரில் வந்துதான் தேர்வு எழுத இருக்கின்றனர். அவர்கள் தேர்வு எழுதுவதற்கு தேவையான இடவசதிகள் அனைத்தும் தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 

அந்தந்த கல்லூரிகள் அதற்கான பணிகளை செய்ய ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றன. தனிமைப்படுத்தும் மையங்களாக இருக்கும் கல்லூரிகளை தவிர, பிற இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்