வாரிசு வேலை வழங்காவிட்டால் கலெக்டர் ஊதியத்தில் பிடித்தம்; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

வாரிசு வேலை வழங்காவிட்டால் கலெக்டர் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2020-09-10 21:33 GMT
சென்னை,

டிசம்பர் மாதத்துக்குள் வாரிசு வேலை வழங்கவில்லை என்றால், ஜனவரி மாதம் முதல் கடலூர் கலெக்டரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து மரணமடைந்த அரசு ஊழியரின் மகனுக்கு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி. இவரது தந்தை கிராம உதவியாளராக பணியில் இருந்தபோது, 2003-ம் ஆண்டு மரணமடைந்தார். இதையடுத்து கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு ரவி கொடுத்த மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். 2011-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு சில அரசு பணிகளுக்கு 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தடை விதித்திருந்தது. பின்னர் இந்த தடை 2007-ம் ஆண்டு மார்ச் 12-ந்தேதி நீக்கப்பட்டு, கருணை அடிப்படையில் விண்ணப்பம் செய்ய 3 மாதம் கால அவகாசம் வழங்கியது.

இந்த 3 மாத கால அவகாசத்துக்குள் மனுதாரர் வாரிசு வேலை கேட்டு விண்ணப்பம் கொடுக்கவில்லை என்று அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. தடை காலத்தில் மனுதாரர் தந்தை இறந்துள்ளார். வாரிசு வேலை கேட்டு 2005-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந்தேதி மனுதாரர் அரசுக்கு விண்ணப்பம் கொடுத்துள்ளார்.

இந்த மனுவை உயர் அதிகாரிக்கு திட்டக்குடி தாசில்தார் பரிந்துரைத்துள்ளார். இதன்பின்னரும் தனக்கு வேலை கிடைக்காததால், முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு மனுதாரர் மனு அனுப்பியுள்ளார். ஆனால், இந்த மனுவை அடிப்படையாக வைத்துக்கொண்டு, மனுதாரர் தந்தை இறந்து 3 ஆண்டுக்குள் வாரிசு வேலைக் கேட்டு விண்ணப்பம் செய்யவில்லை. அரசு வழங்கிய 3 மாத கால அவகாசத்துக்குள் விண்ணப்பம் செய்யவில்லை என்று காரணம் கூறி, வாரிசு வேலை வழங்க மறுத்து தமிழக அரசு கடந்த 2011-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது.

மனுதாரர் வேலைக் கேட்டு 2005-ம் ஆண்டே விண்ணப்பம் கொடுத்துள்ளார். அப்போது, அரசு பணி நியமனத்துக்குத் தான் தடை இருந்ததே தவிர, வாரிசு வேலை கேட்டு விண்ணப்பம் செய்ய தடை எதுவும் இல்லை. எனவே, வாரிசு வேலை வழங்க மறுத்து 2011-ம் ஆண்டு பிறப்பித்த அரசு உத்தரவை ரத்து செய்கிறேன்.

மனுதாரருக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் அரசு பணி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை என்றால், ஜனவரி 1-ந்தேதி முதல் மனுதாரர் ரவி அரசு ஊழியராக கருதப்படுவார். அவருக்கு கடைநிலை ஊழியரின் ஊதியத்தை வழங்கவேண்டும். இந்த ஊதியத்தை, இந்த உத்தரவை அமல்படுத்தாத அதிகாரியின் (கலெக்டரின்) ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும்.

மேலும், மனுதாரருக்கு வாரிசு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிடவில்லை. வாரிசு வேலையை டிசம்பர் மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன் என்பதை கடலூர் கலெக்டருக்கு மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்