நீட் தேர்வு குறித்து கருத்து: நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கூடாது ; கி.வீரமணி, முத்தரசன் வலியுறுத்தல்

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கூடாது என்று கி.வீரமணி, முத்தரசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2020-09-14 19:38 GMT
சென்னை, 

நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இந்த விவகாரத்தில் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கூடாது என்று அரசியல் கட்சியினர் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடிகர் சூர்யாவின் கருத்து நீதிமன்ற அவமதிப்பு ஆகாது. அவரது கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை. நீதிமன்றங்களின் மதிப்பை எந்த வகையிலும் குறைக்கும் வகையில் அந்த அறிக்கை இல்லை. கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய அரசமைப்பு சட்டத்தின் படி பிரமாணம் எடுத்து கடமையாற்றும் நீதிபதி, நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவது எந்த அளவுக்கு சரியானது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்’ என்று கூறி உள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தனது அறிக்கையில், ‘சமூகத்தின் எந்தவொரு சம்பவம் குறித்தும் நியாயமான விமர்சனத்தை முன்வைக்கும் உரிமை ஆரோக்கியமான ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இதனை உள்வாங்காமல் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசுவதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சூர்யாவின் வேண்டுகோளை ஏற்று தமிழ் சமூகம் ஒன்றிணைந்து குரல் எழுப்ப முன்வர வேண்டும்’ என்று கூறி உள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், ‘நடிகர் சூர்யா எதார்த்தமான உண்மையை எடுத்து கூறி இருப்பதை எப்படி நீதித்துறையின் அதிகாரத்தை சிறுமைப்படுத்துவதாக கருத இயலும்?. எனவே, நடிகர் சூர்யா மீது எந்தவித நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது’ என்று கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்