கோவையில் நடந்த இந்து முன்னணி பிரமுகர் கொலையில் 6 பேர் கைது

கோவையில் நடந்த இந்து முன்னணி பிரமுகர் கொலையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். முன்விரோதத்தில் தீர்த்துக்கட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2020-09-15 00:00 GMT
கோவை,

கோவை ஆவாரம்பாளையம், தனலட்சுமி நகரை சேர்ந்தவர் பிஜூ (வயது37).இவர் ராம்நகர் பகுதியில் சோடா கடை நடத்தியதுடன், வட்டிதொழிலிலும் ஈடுபட்டு வந்தார். ராம்நகரில் நடக்கும் பிரச்சினைகளில் தலையிட்டு வந்ததாகவும தெரிகிறது. 

காந்திபுரம் பகுதியில் பெல்ட் கடை நடத்தி வரும் ஆறுமுகம் என்பவரின் மகன் நிதீஷ்குமார் (20) என்பவருக்கும் ராம்நகரை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நிதீஷ்குமார் கத்தியால் குத்தப்பட்டார். இதுதொடர்பாக ராகுல் (வயது 21), விஷ்ணு (21) ஆகிய 2 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்த பிரச்சினையிலும் பிஜூ தலையிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த நிதீஷ்குமாரின் கூட்டாளிகள், நேற்று முன்தினம் ராம்நகர் பகுதியில் பிஜூவை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் ராம்நகர் பகுதியில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின்பேரில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி நேற்று கோவையை சேர்ந்த ராஜா, கார்த்திக், அரவிந்த், அருண், பிரபு, பிரவீன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்கள் நிதீஷ்குமாரின் தந்தை ஆறுமுகத்தின் கூட்டாளிகள் என்று தெரிகிறது. இதனை தொடர்ந்து ஆறுமுகத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

முன்விரோதம் காரணமாகவும், நிதீஷ்குமார் கத்தியால் குத்தப்பட்டதால் பழிக்குபழிவாங்க பிஜூவை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, இந்த கொலையை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பிஜூவின் உடல் பலத்தபோலீஸ் பாதுகாப்புடன் ஆவாரம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஏராளமான இந்து முன்னணியினரும், பிஜூவின் நண்பர்களும், ஆம்புலன்ஸ் வேனை பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்