சொட்டு நீர் பாசன திட்டங்களில் ‘எவ்வித முறைகேட்டுக்கும் வாய்ப்பு இல்லை’ தோட்டக்கலைத்துறை திட்டவட்ட மறுப்பு

‘சொட்டு நீர் பாசன திட்டங்களில் எந்த வித முறைகேடு நடப்பதற்கும் வாய்ப்பே இல்லை’ என்று தமிழக தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரி திட்டவட்டமாக மறுத்து உள்ளார்.

Update: 2020-09-15 22:15 GMT
சென்னை, 

தமிழகத்தில், பிரதமரின் விவசாயிகள் ஊக்கத்தொகை திட்டமான கிசான் திட்டத்தில் ரூ.110 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, தமிழக அரசின் வேளாண்மைத்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் ‘சொட்டு நீர் பாசனம்’ திட்டத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக திடீரென்று செய்திகள் வெளியானது. இதற்கு தோட்டக்கலை துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசு நிதி

இதுகுறித்து தமிழக தோட்டக்கலைத்துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்துவதுடன், தேவையான அளவில், தேவையான நேரத்தில் பாசன நீரை முறையாக வழங்கி பயிர் நன்கு செழித்து வளர்ந்து நல்ல மகசூலை அளிப்பதற்காக சொட்டு நீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி வருகிறது. திட்டத்திற்கு மத்திய அரசு 35 சதவீதமும், மாநில அரசு 65 சதவீதமும் நிதி ஒதுக்குகிறது.

சிறு, குறு விவசாயிகளுக்கு 2½ ஏக்கரிலும், பெரிய விவசாயிகள் 5 ஏக்கர் வரையிலும் சொட்டு நீர் பாசனத்தை அமைத்து கொள்ளலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு நூறு சதவீதமும், பெரும் விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சொட்டு நீர் பாசன திட்டம் அமைப்பதற்காக 45 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் எந்த நிறுவனத்தையும் தேர்வு செய்து அமைத்து கொள்ளலாம்.

சொட்டு நீர் பாசன திட்டம் அமைத்த உடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு, தோட்டக்கலைத்துறை சார்பில் முதலில் 60 சதவீதம் தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. பின்னர் விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறையை சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த பிறகு தான் மீதம் உள்ள 40 சதவீதம் தொகை வழங்கப்படுகிறது. சொட்டுநீர் பாசன திட்டத்தை அமைத்த நிறுவனம் தொடர்ந்து 3 ஆண்டுகள் பராமரித்து வருகிறது. தவறும் பட்சத்தில் தோட்டக்கலைத்துறைக்கு நிறுவனத்தினர் அளித்துள்ள வங்கி உத்தரவாத தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இப்படி அனைத்தும் வெளிப்படைத்தன்மையாகவே நடந்து வருகிறது. இதனால் எந்த வித முறைகேடுகளும் நடக்க வாய்ப்பே இல்லை.

சிறு, குறு விவசாயிகள் வேளாண் பயிருக்கு ஒரு நிறுவனத்தின் உதவியுடனும், பின்னர் தோட்டக்கலை பயிர்களான காய்கறிகளுக்கு மற்றொரு நிறுவனத்தின் உதவியுடனும் சொட்டு நீர் பாசன திட்டத்தை அமைக்க அனுமதி இல்லை. அதேபோல் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலான நிலப்பரப்பில் அமைக்க முடியாது. திட்டத்தை முறையாக அமைக்கவில்லை என்று விவசாயிகள் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீண்டும் முறையாக அமைத்து தர வேண்டும். விவசாயிகளுக்கு இதுதொடர்பாக புகார்கள் இருந்தால் 18004254444 இலவச தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கான காலமாகும். விவசாயிகள் இதனை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை 1 லட்சம் விவசாயிகளுக்கு சொந்தமான 2½ லட்சம் ஏக்கரில் சொட்டு நீர் பாசன திட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. மானியமாக ரூ.500 கோடி வரை வழங்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு நாட்டிலேயே அதிகபட்சமாக 2.63 லட்சம் ஹெக்டேரில் சொட்டு நீர் பாசன திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாகவே தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. தமிழகத்தை பார்த்து பிற மாநிலங்களிலும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்