அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிகிறது- சட்டசபையில் மசோதா நிறைவேறியது

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நேற்று நிறைவேறியது.

Update: 2020-09-16 23:30 GMT
சென்னை, 

தமிழக சட்டசபையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அண்ணா பல்கலைக்கழக சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதாக்களை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொறியியல், தொழில்நுட்பம், அவை தொடர்பான அறிவியல் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காகவும், அவற்றில் ஆராய்ச்சிகளைத் தொடர்வதிலும், முன்னேற்ற வழிமுறைகளை காண்பதற்காகவும் அண்ணா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இந்த பல்கலைக்கழகம், 13 உறுப்புக் கல்லூரிகள், கிண்டியிலுள்ள பொறியியல் கல்லூரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியின் அனைத்துத் துறைகள், குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகள், கல்வி நிறுவனங்களை கொண்டு இயங்கி வருகிறது.


அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை சென்னையில் இருந்து நிர்வகித்து வருவது பல்கலைக்கழகத்தின் அதிக நேரத்தையும், ஆற்றலையும் எடுத்துக் கொள்கிறது.

இணைவு பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளை சிறந்த முறையில் கண்காணிப்பதற்கும், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உயர்கல்வி, ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவதற்காக புதிய இணைவு வகை பல்கலைக்கழகத்தை, இணைவு கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கொண்டுள்ள, ‘அண்ணா பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் சென்னையில் தோற்றுவிக்கவும்,

தற்போதுள்ள பல்கலைக்கழகத்தை, ‘அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒருமை வகை பல்கலைக்கழகமாக மாற்றி அமைக்கவும் அரசு தீர்மானித்துள்ளது. அதற்கு வழிவகை செய்ய இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மாநகராட்சி எல்லையிலோ அல்லது அதன் எல்லையைச் சுற்றி 50 கி.மீ. சுற்றளவிற்குள் உள்ள இடத்திலோ தனி இலச்சினையைக் கொண்டு அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இந்த சட்ட மசோதா மீது தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்முடி பேசினார். அவர் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டது. ஆனால் உங்கள் ஆட்சி வந்ததும் அதை ரத்து செய்தீர்கள். ஆனால் இப்போது நீங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கிறீர்கள்.

அனைத்து பகுதிகளிலும் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டால் அங்குள்ள மாணவர்களுக்கு அது பயனளிக்கும் என்பதால் அதை வரவேற்கிறேன். தற்போது மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்ததில் ஏ.ஐ.சி.டி.இ. ஒரு கருத்தை கூறியிருக்கிறது. எனவே முதல்- அமைச்சரின் முடிவு தொடருமா?

இவ்வாறு அவர் பேசினார்.

அதற்கு பதிலளித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

யு.ஜி.சி. என்ற பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் ஏ.ஐ.சி.டி.இ. ஆகியவற்றின் வழிகாட்டுதல்படிதான் கல்லூரிகளில் குறிப்பிட்ட செமஸ்டர் மாணவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று முதல்-அமைச்சர் அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளுக்கு இணங்க அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், தனது தனிப்பட்ட இ-மெயில் ஐடி மூலமாகத்தான் கருத்து தெரிவித்துள்ளார். அதை அவரது தனிப்பட்ட கருத்தாகத்தான் எடுக்க முடியும். அண்ணா பல்கலைக்கழகத்தின் இ-மெயில் ஐடி.யில் இருந்து அவர் எந்த தகவலையும் அனுப்பவில்லை.

அதுபோல ஏ.ஐ.சி.டி.இ. அரசுடன் நேரடியாக எந்த தொடர்பும் கொள்ளவில்லை. இந்த விஷயத்தில் மாணவர்கள் பயப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

அதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் சட்ட மசோதா, குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்டசபையில் நிறைவேறியது.

மேலும் செய்திகள்