சென்னையில் 1 லட்சம் வணிகர்களுக்கு கொரோனா பரிசோதனை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னையில் 1 லட்சம் வணிகர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-01 10:19 GMT
சென்னை,

இது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-

"பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பரிசோதனைகளை அதிகரித்தல், காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள், வீடுகள் தோறும் சென்று வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்களைக் கண்டறிதல், வைரஸ் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைத் தனிமைப்படுத்துதல் போன்ற பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் வைரஸ் தொற்று சென்னையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் மார்ச் 17 முதல் தற்போது வரை 1 லட்சத்து 66 ஆயிரத்து 29 நபர்கள் பாதிக்கப்பட்டு, அவர்களில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 641 (91%) நபர்கள் குணமடைந்துள்ளனர். தற்போது 11 ஆயிரத்து 193 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 29.09.2020 அன்று வரை 14 லட்சத்து 13 ஆயிரத்து 469 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெருநகர சென்னை மாநகராட்சி களப்பணி மூலம் சேகரிக்கப்பட்ட மற்றும் சோதிக்கப்பட்ட மாதிரிகள் 7 லட்சத்து 8,891. இவை ஒரு மில்லியனுக்கான சோதனையில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 23 ஆகும். நாட்டிலேயே அதிகமான பரிசோதனை செய்த மாநகராட்சி பெருநகர சென்னை மாநகராட்சி.

சென்னையில் தற்போதுவரை 53 ஆயிரத்து 495 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அவற்றில் 27.45 லட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர். இந்தியாவிலேயே பெருநகர சென்னை மாநகராட்சியில்தான் அதிகமாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அன்றாடத் தேவைகளான காய்கறி, பழங்கள் மற்றும் இதர பொருட்களை வாங்க அங்காடிகளுக்குச் செல்கின்றனர். இவ்விடங்களில் பொதுமக்களுக்குப் பிற விற்பனையாளர்களிடமிருந்து தொற்றுப் பரவாமல் தடுப்பதற்காக விற்பனையாளர்களுக்குச் சோதனை செய்யப்படுகிறது. இதுவரை 1 லட்சத்து 124 விற்பனையாளர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். இதன் முலம் தினமும் சந்தைகளுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது. சென்னையில் 29.09.2020 அன்று வரை 22 ஆயிரத்து 808 வீடுகளும், 1.82 லட்சம் பேரும் வீட்டுத் தனிமைப்படுத்துதலில் உள்ளனர்.

மேலும், தமிழக அரசின் உத்தரவின் பேரில் அனைத்து வழிப்பாட்டு தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. அங்கு கண்டிப்பாக முகக்கவசம் அணியவும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், அனைத்து அலுவலங்களில் கை கழுவும் இயந்திரம், கை சுத்திகரிப்பான், சோப்பு போன்றவற்றைப் பயன்படுத்தவும் மற்றும் ஊழியர்களுக்குப் பரிசோதனை செய்யவும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன".

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

மேலும் செய்திகள்