தொல்லியல் முதுகலை பட்டயப்படிப்பு சேர்க்கைக்கு தமிழை புறக்கணித்த விவகாரம்: மொழிகளில் பாரபட்சம் காட்டிய அதிகாரி மீது எடுத்த நடவடிக்கை என்ன? மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு சரமாரி கேள்வி

தொல்லியல் முதுகலை பட்டயப் படிப்பில் தமிழை புறக்கணித்து அறிவித்தது தொடர்பான விவகாரத்தில், “மொழிகளில் பாரபட்சம் காட்டிய அதிகாரி மீது எடுத்த நடவடிக்கை என்ன?” என்று மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியது.

Update: 2020-10-09 23:17 GMT
மதுரை,

மதுரையை சேர்ந்த வக்கீல் ரமேஷ்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

உத்தரபிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் மத்திய தொல்லியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்கு 2 ஆண்டு தொல்லியல் முதுகலை பட்டயப்படிப்பு உள்பட பல்வேறு தொல்லியல் சார்ந்த படிப்பு கற்பிக்கப்படுகின்றது. தற்போது இங்கு முதுகலை பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த பட்டயப்படிப்பில் சேர வேண்டும் என்றால், இந்திய வரலாறு, தொல்லியல்துறை, மானிடவியல், செம்மொழிகளான சமஸ்கிருதம், பாலி மற்றும் அரபுமொழிகளில் முதுகலை பட்டம் பெற்று உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் பழமையான மொழியும், உயர்தனிச் செம்மொழியான தமிழ்மொழியில் முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிப்பதில் இருந்து புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, தமிழ்மொழியில் படித்தவர்களும் மேற்கண்ட தொல்லியல் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர்.

அப்போது, மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, “தற்போது தொல்லியல் பட்டயப்படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை இணைத்து மத்திய அரசு ஆணை பிறப்பித்து உள்ளது” என்று தெரிவித்தார். அதுதொடர்பான ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

பின்னர் மனுதாரர் சார்பில் வக்கீல் அழகுமணி ஆஜராகி, “தொல்லியல் முதுகலை பட்டயப்படிப்புக்கு 15 பேர்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.8 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த படிப்பில் சேர்ந்தாலே, தொல்லியல் துறை பணியில் சேர்ந்ததாக எடுத்துக்கொள்ளலாம். நாடு முழுவதும் எண்ணற்ற தொல்லியல் துறை பணிகள் காலியாக உள்ளன. ஆனால் இந்த படிப்பில் சேர தமிழ்மொழில் படித்தவர்கள் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர்” என்று வாதாடினார்.

இதையடுத்து நீதிபதிகள், “முதல்கட்டமாக அறிவிப்பு வெளியிடும்போதே செம்மொழிகளில் பழமையானதும், முதன்மையானதுமான தமிழ்மொழியை சேர்க்காதது ஏன்? இந்த விவகாரத்தில் தமிழ் அறிஞர்கள், அரசியல்வாதிகள், கோர்ட்டு தலையிட்டதால்தான் தற்போது தமிழ் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என அடுத்தகட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளீர்கள். யாரும் கேள்வி எழுப்பாமல் இருந்திருந்தால் அப்படியே மூடி மறைத்து இருப்பீர்கள். பாலி, அரபு போன்ற மொழிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், நம் நாட்டில் உள்ள மொழிகளுக்கு அளிக்கப்படாதது ஏன்?

மொழிகளில் பாரபட்சம் காட்டும் வகையில் அறிவிப்பை தயார் செய்த அதிகாரி யார்? செம்மொழிகள் எவை என்று அறியாமல் ஒரு அதிகாரி செயல்படுவாரா? அவர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என மத்திய அரசு வக்கீலிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

மொழி வாரியாக மாநிலங்கள்

மேலும் நீதிபதிகள், “தமிழை புறக்கணிக்கும் வகையில் செயல்படுவதால் தான், தமிழ் தீவிரவாதிகள், தமிழின் முக்கியத்துவத்தை உணர்த்தும் போராட்டங்களை நடத்துபவர்கள் உருவாகின்றனர். மொழிகளை பற்றிய விவகாரங்களில் அந்தந்த மொழி உணர்வுடன் கவனமாக செயல்பட வேண்டும். நம் நாட்டில் சாதி, மத அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை. மொழிவாரியாகத்தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன” என்றனர்.

அப்போது மனுதாரர் வக்கீல், “தொல்லியல் பட்டயப்படிப்பில் உள்ள 15 இடங்களை அதிகரிக்க உத்தரவிட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு இடம் வீதம் என்றாவது ஏற்படுத்தினால் அதிக அளவில் பயன்பெறுவார்கள்” என்றார்.

அதற்கு நீதிபதிகள், “முதற்கட்டமாக இந்த அறிவிப்பு சம்பந்தமாக பதில் அளிக்கட்டும்” என்றனர்.

“இந்த விவகாரத்தில் உரிய அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மத்திய தொல்லியல் துறையினர் விரிவான பதில் அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் இந்த வழக்கை கீழடி, ஆதிச்சநல்லூர் அகழாய்வு வழக்குகளுடன் சேர்த்து பட்டியலிடும்படி உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்