"அரசுப் பள்ளி மாணவர்களின் இட ஒதுக்கீட்டில் எந்த குளறுபடியும் இல்லை" - அமைச்சர் விஜயபாஸ்கர்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் எந்த குளறுபடியும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-17 08:08 GMT
புதுக்கோட்டை,

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மானவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவானது சட்டமன்றத்தில் அனைத்து அமைச்சர்களின் ஒப்புதலையும் பெற்று தற்போது தமிழக ஆளுநரிடம் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத வரை, மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில் கால தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையில் புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் எந்த குளறுபடியும் இல்லை என்று தெரிவித்தார். அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் மீது அக்கறை கொண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் சட்டமன்றத்தில் இந்த இட ஒதுக்கீடு பரிந்துரையை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது இந்த மசோதா ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதால், இது குறித்து எந்த குழப்பமும் அடையத் தேவையில்லை என்றும், விரைவில் ஆளுநர் நல்ல முடிவை தெரிவிப்பார் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்