பொறியியல் கல்லூரிகள் இணைப்பு நிறுத்திவைப்பு: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் உண்டு - உயர்நீதிமன்றம்

பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், நிறுத்தி வைக்கவும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2020-10-20 11:29 GMT
சென்னை,

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு தனியார் கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததால், அந்த 2 கல்லூரிகளின் பல்கலைக்கழக இணைப்பை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்தது. இதனை எதிர்த்து சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது குறித்து கல்லூரிகள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், பல்கலைக்கழக இணைப்பு மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், நிறுத்தி வைக்கவும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தனர். மேலும் தரமான கல்வியை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் இது குறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை இணைப்பு நிறுத்தி வைப்பு உத்தரவை அமல்படுத்தக் கூடாது என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்