நவ.16-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

நவ.16-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-03 07:32 GMT
சென்னை, 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த மாதம் முடிவடைந்தநிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் பள்ளிகளில் வரும் 16ஆம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகள் தொடங்கும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நவ.16-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு திமுக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் அவசர கோலத்தில் அறிவித்திருக்கிறார். மாணவர்களின் பாதுகாப்பு ,விடுதி -உணவு போன்றவற்றை குறித்த குழப்பங்கள் நிலவுகின்றன. கொரோனாவின் இரண்டாவது அலை குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

துவக்க பள்ளிகளை விட உயர்நிலை பள்ளிகளில் பாதிப்பு அதிகம் என வெளி நாடுகளில் ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்துள்ளது. மாணவ, மாணவிகளின் உயிர் பாதுகாப்பு தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது.

பெற்றோர் - ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்த வேண்டும். பொங்கல் விடுமுறை முடிந்து 2021 ஜனவரி இறுதியில் அப்போதிருக்கும் சூழ்நிலைகளை ஆய்வு செய்து பள்ளிகளை திறக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பை நிறுத்தி வைத்து, மாற்று அறிவிப்பை வெளியிட்டு மக்களின் மனப்பதற்றத்தைத் தணிக்க வேண்டும்” என்று அதில் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்