கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-12-01 09:19 GMT
சென்னை,

வங்க கடலில் உருவான நிவர் புயலை தொடர்ந்து புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.  இந்நிலையில், திரிகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.  பின்னர் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவடைந்து,  நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக தென் தமிழகம், கேரளாவில் அதி கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து தென் தமிழக மாவட்டங்களில் புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், வரும் டிசம்பர் 4 ஆம் தேதி வரை, புயல் வீச வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி மருந்து, பசுந்தீவனங்களை போதிய அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். 

மீட்பு படையினர் ஜேசிபி வாகனங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகளுடன் பாதிப்பு ஏற்படும் இடங்களில் முகாமிட வேண்டும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, கூடுதலாக ஆயிரம் மின்வாரிய பணியாளர்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் 3 பேரிடர் மீட்புக் குழுக்கள், மதுரை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தலா 2 வீதம் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்