மாமல்லபுரத்தில் நாளை முதல் அனுமதி - தொல்லியல்துறை அறிவிப்பு

மாமல்லபுரத்தில் நாளை முதல் சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2020-12-13 15:36 GMT
மாமல்லபுரம், 

கொரோனா பாதிப்புகள் காரணமாக சுற்றுலா பகுதிகள் மற்றும் கடற்கரை உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்கள் கடந்த மார்ச் மூடப்பட்டது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும் சுற்றுலா தலங்களையும் கடற்கரையையும் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளை டிசம்பர் 14-ம் தேதி திறக்க அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் மாமல்லபுரத்தில் நாளை முதல் அனுமதி வழங்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்து ரதம் போன்ற பகுதிகள் 8 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படுகிறது. கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டி நெறிமுறைகளுடன் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதன்படி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தினமும் 2000 பேர் சுற்றிப்பார்க்கலாம் என்றும் 10 வயதுக்கு குறைந்தவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுழைவு கட்டணத்தை பணமாக செலுத்தமுடியாது என்றும் ஆன்லைன் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும் என்றும் தொல்லியல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்