இங்கிலாந்தில் இருந்து விமானத்தில் திருச்சி திரும்பிய 3 பயணிகள் மாயம் - கொரோனா பரிசோதனைக்கு பயந்து உறவினர் வீடுகளில் பதுங்கலா?

இங்கிலாந்தில் இருந்து விமானத்தில் திருச்சி திரும்பிய 3 பயணிகள் மாயமாகினர். அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பயந்து உறவினர்கள் வீடுகளில் பதுங்கி உள்ளனரா? என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-01-05 03:25 GMT
செம்பட்டு,

உலக நாடுகளை சுமார் ஓராண்டு காலம் தனது கோரப்பிடியில் வைத்திருந்த கொரோனா வைரஸ் தற்போது தான் தனது பிடியை மெல்ல தளர்த்தி உள்ளது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. இதனால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டநிலையில் தற்போது இங்கிலாந்தில் உருவாகியுள்ள புதிய வகை கொரோனா வைரசால் உலக நாடுகள் மீண்டும் கவலை கொண்டுள்ளன. இந்த புதிய வகை வைரஸ் இந்தியாவுக்குள் நுழைந்து விடாதபடி மத்திய, மாநில அரசுகள் அதற்கான தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பும் இந்தியர்கள் அந்தந்த விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அதில் யாருக்காவது கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தால், அது புதிய வகை வைரசா? என கண்டறிய புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அதன் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், தஞ்சாவூரை சேர்ந்த 6 பேரின் மருத்துவ மாதிரிகள் பரிசோதனைக்காக புனேக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், இங்கிலாந்தில் இருந்து 105 இந்தியர்கள் சமீபத்தில் விமானம் மூலம் திருச்சி திரும்பினர். அவர்களில் 101 பேரின் விவரங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஆனால், 4 பேருடைய முகவரிகள் உறுதி செய்யப்படாததால் கொரோனா பரிசோதனைக்கு பயந்து அவர்கள் உறவினர்கள் வீடுகளில் பதுங்கி உள்ளார்களா? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்களில் ஒரு பயணி மட்டும் மீண்டும் இங்கிலாந்து சென்றது தெரிய வருகிறது. அதனைத்தொடர்ந்து அவரது உறவினர்களையும், நண்பர்களையும் அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவர்களில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதேபோல, இங்கிலாந்தில் பணிபுரிந்த புதுக்கோட்டையை சேர்ந்த 20 பேர் மற்றும் அவர்களின் உறவினர்கள் 41 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. தொற்று இல்லாவிட்டாலும் அவர்களை தனிமையில் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்