அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-01-13 02:04 GMT
சென்னை,

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊழல், அதிகார அத்துமீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையை எதிர்கொண்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணி நீட்டிப்பு வழங்க பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான பன்வாரிலால் புரோகித் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான விதிகளை காலில் போட்டு மிதித்து விட்டு, புகார்களுக்குள்ளான துணைவேந்தருக்கு பணிநீட்டிப்பு வழங்கத்துடிப்பது கண்டிக்கத்தக்கது.

ஒரு துணைவேந்தர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக புதிய துணைவேந்தர் தேர்ந்தெடுக்கப்படாததற்கு கவர்னர்தான் பொறுப்பேற்கவேண்டும். 2017-ம் ஆண்டில் கவர்னராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித், ‘‘துணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். ஒரு துணைவேந்தர் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்பட்டு விடுவார்’’ என வாக்குறுதி அளித்திருந்தார். அதைப் பின்பற்றாமல் துணைவேந்தர்களுக்கு, கவர்னர் தன்னிச்சையாக பணிநீட்டிப்பு வழங்குவது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.

எனவே, சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை கவர்னர் மாளிகை திரும்பப்பெறவேண்டும். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணிநீட்டிப்பு வழங்கக்கூடாது. அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக அவர் மீதான விசாரணையை முடித்து, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால், வழக்குப் பதிவு செய்து, துணைவேந்தர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்