வேளச்சேரியில் வனத்துறை தலைமையக கட்டிடம் கட்ட ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு உத்தரவு

வேளச்சேரியில் வனத்துறை தலைமையக கட்டிடம் கட்ட ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-01-13 03:16 GMT
சென்னை, 

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக சட்டசபையில் 110-ம் விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேளச்சேரியில் வனத்துறை தலைமையக கட்டிடம் கட்டுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதைக் கட்டுவதற்காக ரூ.30 கோடி ஒதுக்கி கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 25-ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அதே ஆண்டு செப்டம்பர் 10-ந் தேதி கட்டுமானப்பணிக்காக ரூ.20 கோடி நிதி அளிக்கப்பட்டதோடு, அந்த நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் அரசுக்கு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கடிதங்கள் எழுதியிருந்தார். அவற்றில், பணிகளை இறுதி செய்வதற்காக மேலும் ரூ.9 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அவரது கோரிக்கையை அரசு பரிசீலித்து முதல் கட்டமாக ரூ.9 கோடியை ஒதுக்க முடிவெடுத்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்