ஆபாசமான பேட்டிகளை ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

யூ-டியூப் சேனல்களில் ஆபாசமான பேட்டிகளை ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-01-13 09:04 GMT
சென்னை,

சென்னை டாக்ஸ் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனல் செயல்பட்டு வந்தது. இந்த சேனலில் சென்னை பெசன்ட்நகர், நீலாங்கரை கடற்கரை பகுதி உள்ளிட்ட பொது இடங்களுக்கு வரும் பெண்களிடம் ஆபாசமான கேள்விகளை கேட்டு பேட்டி எடுத்து ஒளிபரப்பி இருந்தனர்.

இது தொடர்பாக சென்னை சாஸ்திரிநகர் போலீசில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் சென்னை டாக்ஸ் யூ-டியூப் சேனலின் தொகுப்பாளர் ஆசின்பத்சா (வயது 23), கேமராமேன் அஜய்பாபு (24) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அந்த யூடியூப் சேனலின் உரிமையாளர் தினேஷ் (31) என்பவரும் கைதானார்.

இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த யூடியூப் சேனல் 2019-ம் ஆண்டு முதல் செயல்படுவது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதை தொடர்ந்து சென்னை பெசன்ட்நகர், நீலாங்கரை கடற்கரை பகுதியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அடையாறு துணை கமிஷனர் விக்ரமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால், அது பற்றி 8754401111 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆபாசமான, அருவறுக்கத்தக்க வகையில் பேட்டிகளை எடுத்து ஒளிபரப்பும் யூ-டியூப் சேனல்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஏற்கனவே கடந்த காலங்களில் இது போன்ற ஆபாசமான பேட்டிகளைக் கொண்ட காணொலிகள் யூ-டியுப் சேனல்களில் இருந்தால், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து இனி வரும் காலங்களில் ஆபாசமான, அருவறுக்கத்தக்க வகையில் பேட்டி எடுத்து அந்த காணொலி காட்சிகளை யூ-டியூப் சேனல்களில் ஒளிபரப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்