கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பதால் தமிழக சட்டசபை தேர்தல் செலவு உயரும் - சத்யபிரத சாகு தகவல்

கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பதால் தமிழக சட்டசபை தேர்தல் செலவு உயரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-13 21:33 GMT
சென்னை, 

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணைய பொது செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு அரசு செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி சென்றது.

அப்போது தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்காக ரூ.621 கோடி ரூபாய் நிதி கோரியுள்ளதாக உமேஷ் சின்ஹா கூறினார். கொரோனா பரவல் காரணமாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் அவர்களுக்கான செலவீனங்கள் அதிகரிப்பு ஆகியவற்றினால் கூடுதல் செலவாக வாய்ப்புள்ளது. எனவே தேர்தல் செலவுத் தொகை மேலும் அதிகரிக்கக்கூடும்.

தமிழகத்தில் தற்போதுள்ள கொரோனா பரவல் நிலவரம் குறித்தும், இந்த காலத்தில் தேர்தல் நடத்தும் போது பின்பற்ற வேண்டிய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் குறித்தும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் முதல்கட்ட ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட ஆலோசனை விரைவில் நடத்தப்படும்.

இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எனவே ஏற்கனவே திட்டமிட்டப்படி 20-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்