‘கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு இல்லை’ - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிரு‌‌ஷ்ணன் பேட்டி

கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2021-01-17 23:30 GMT
திருச்சி, 

திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நேற்று 2-வது நாளாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. அங்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன் வந்து கோவேக்சின் தடுப்பூசி போட்டு கொள்வதற்கான ஒப்புதல் படிவத்தில் கையொப்பமிட்டு வழங்கிவிட்டு தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி போட தொடங்கிய முதல்நாளில் (நேற்று முன்தினம்) தமிழகம் முழுவதும் 160 மையங்களில் 3,126 கோவி‌ஷீல்டு தடுப்பூசிகளும், 6 மையங்களில் 99 கோவேக்சின் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது. இதில் மருத்துவத்துறையை சேர்ந்த மூத்த டாக்டர்கள், டீன்கள், மருத்துவ பேராசிரியர்கள் என நிறையபேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதிகபட்சமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 111 பேரும், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 100 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

மற்ற மையங்களில் படிப்படியாக 80 பேர், 75 பேர் என பலர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். இதுவரை யாருக்கும் எந்தவித பக்கவிளைவும் ஏற்படவில்லை. சுகாதாரத்துறையை சேர்ந்தவர் என்ற முறையில் நானும் தற்போது கோவேக்சின் தடுப்பூசியை போட்டுக்கொண்டேன்.

எல்லோரும் தடுப்பூசி போடுவதில் அரசின் இலக்கு என்ன? என்று கேட்கிறார்கள். இது இலக்கு சார்ந்த திட்டம் கிடையாது. சுயவிருப்பத்தின் பேரிலேயே தடுப்பூசி போடப்படுகிறது. கொரோனா 2-வது அலையை தடுக்க இந்த தடுப்பூசி மிக முக்கியமான மைல்கல். அடுத்த சில மாதங்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கொரோனா பாதிப்பு பூஜ்யம் என்ற நிலைக்கு வர வேண்டும். கோவி‌ஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுமே பாதுகாப்பானது. ஆனால் யாருக்கும் கட்டாயப்படுத்தி தடுப்பூசி போடுவதில்லை. தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 89 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்துள்ளனர். அடுத்ததாக 2 லட்சம் முன்கள பணியாளர்கள் தடுப்பூசி போட பதிவு செய்துள்ளனர் என்று அவர் கூறினார்.

பின்னர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2-வது நாளாக நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி போடும் முகாமை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்வமாக தடுப்பூசி போடும் டாக்டர்கள், செவிலியர்கள், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். தமிழகத்தில் இன்று (அதாவது நேற்று) 1 மணி வரை 4 ஆயிரத்து 38 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறிப்பாக கோவேக்சின் 171 பேருக்கு போடப்பட்டுள்ளது.

முதலில் மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. பின்னர் முன்கள பணியாளர்களுக்கு போடப்படும். போலீஸ்துறையினர், ஊரக உள்ளாட்சித்துறையினர் வருகிற 25-ந் தேதி வரை கோவிட் செயலியில் தடுப்பூசி போட பதிவு செய்து கொள்ளலாம். தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டோர், 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அதன்பிறகு பொதுமக்களுக்கு போடப்படும்.

தடுப்பூசி போட எப்படி பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவிக்கும். கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானவை. அதிக நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவை என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கோவேக்சின் 3-ம் கட்ட பரிசோதனை தனியாக நடக்கிறது. அந்த பரிசோதனை நடக்கும்போதே இந்தியா முழுவதும் தடுப்பூசியும் கொடுக்கப்பட்டுள்ளது. 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளனர். பரிசோதனைக்கும், தற்போது போடப்படும் கோவேக்சின் தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

தமிழகத்தை பொறுத்தவரை பதிவு செய்தவர்களுக்கு தன் விருப்பத்தின்பேரில் படிப்படியாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட வேண்டுமா? வேண்டாமா? என்பது அவர்களது விருப்பம். போடவில்லை என்றால் ஏன்? போடவில்லை என யாரையும் கேட்கமாட்டோம். இன்று (அதாவது நேற்று) ஞாயிற்றுக்கிழமை என்பதால் 3 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படவில்லை.

நமது முதல் இலக்கு பக்கவிளைவு இருக்கக்கூடாது. தமிழகத்தில் 2 நாட்களிலும் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை. போலியோ சொட்டுமருந்து போல் ஒரே நாளில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கு கிடையாது. முதல் 3 நாட்களுக்கு இயல்பாகவே மக்களுக்கு கேள்வி இருக்கலாம். அனைத்து வழிகாட்டுதல்களையும், கேள்விக்கான பதில்களையும் நாங்கள் சொல்கிறோம்.

தடுப்பூசி போட விரும்பும் அனைவருக்கும் படிப்படியாக போடப்படும். எனவே யாரும் அச்சப்பட வேண்டாம். தமிழகத்தில் 8 கோடி மக்கள் உள்ளனர். தற்போது 2½ லட்சம் பேருக்கு போடக்கூடிய 5½ லட்சம் டோஸ்கள் தான் இருக்கிறது. அந்த டோஸ்களை தேவைக்கு ஏற்ப, விருப்பத்திற்கு ஏற்ப போடப்படும். மத்திய அரசின் வினியோகத்துக்கு ஏற்ப பொதுமக்களுக்கு எப்போது போடப்படும் என வெளிப்படையாக தெரிவிக்கப்படும்.

தமிழகத்துக்கு 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம் என்பது முக்கியம் அல்ல. யாருக்கும் பக்கவிளைவு இல்லை என்பது தான் இலக்கு. தடுப்பூசி போட வருபவர்கள் உணவு உட்கொள்ளாமல் வரக்கூடாது.

தடுப்பூசி போட்ட பிறகு ரத்தகொதிப்பு, நீரிழிவு நோய் உள்ளவர்கள் 42 நாட்களுக்கு அசைவ உணவை தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிகள், 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படாது. கொரோனா நோயாளிகளுக்கு நேரடியாக தடுப்பூசி போடப்படாது. ஆனால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் போட்டு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்