பள்ளிக்கூடம் திறந்த முதல்நாளிலேயே சோகம்: பிளஸ்-2 மாணவர்கள் 3 பேர் தற்கொலை

பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளிலேயே பிளஸ்-2 மாணவர்கள் 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2021-01-19 20:39 GMT
கோப்புப்படம்
சென்னை, 

சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் சஞ்சய்குமார் (வயது 15). இவர் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்ததால், சஞ்சய்குமார் பள்ளிக்கு சென்றுள்ளார்.

அப்போது அவரது தலையில் முடிஅதிகமாக இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து ஆசிரியர்கள் சஞ்சய்குமாரை கண்டித்து உடனடியாக முடியை வெட்டிவிட்டு வருமாறு வீட்டுக்கு அனுப்பினர். இதனால் மனமுடைந்த மாணவர் சஞ்சய்குமார், வீட்டிற்கு வந்து சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல ஈரோடு குமலன்குட்டை கணபதி நகரை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சக்தி தருண் (17) என்பவரும் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளிக்கூடங்கள் திறக்கும் அறிவிப்பை கேட்டதில் இருந்து புலம்பி வந்ததாகவும், அந்த அச்சம் காரணமாக தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது தந்தை தெரிவித்து உள்ளார்.

பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த சகோதரிகள் சீதா(18), கீர்த்தனா(17). பண்ருட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஒரே சைக்கிளில்தான் பள்ளிக்கூடத்திற்கு சென்று வருவார்கள். பள்ளிக்கூடத்திற்கு நேரமாகி விட்டதால் இருந்த ஒரு சைக்கிளில் சீதா மட்டும் சென்று விட்டார். பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளிலேயே தாமதமாக சென்றால் ஆசிரியர்கள் திட்டுவார்களே என்று அச்சமடைந்த கீர்த்தனா வீட்டில் இருந்த மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளிலேயே 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்