நூதன முறையில் 3.46 கிலோ தங்கம் கடத்தல்; துபாயில் இருந்து தமிழகம் வந்த 5 பேர் கைது

துபாயில் இருந்து தமிழகம் வந்த 5 பேரிடம் இருந்து ரூ.1.75 கோடி மதிப்பிலான 3.46 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது.

Update: 2021-01-24 14:47 GMT
சென்னை,

உலகில் அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.  பல தனித்தன்மைகள் வாய்ந்த இந்த தங்கம் நகைகளாக, ஆண், பெண் என வித்தியாசமின்றி அனைவராலும் விரும்பி அணியப்படுகிறது.  அதிலும், தங்க ஆபரணங்கள் என்றால் பெண்களுக்கு தீராத ஆர்வம்.  ஆனால், இந்த தங்கம் கடத்தல்காரர்களிடம் சிக்கி படும்பாடு பெரியது.

துபாயில் இருந்து தமிழகம் வரும் பயணிகளில் சிலர் தங்க கடத்தலில் ஈடுபடுகின்றனர் என சுங்க துறைக்கு உளவு தகவல் கிடைத்தது.  இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய 5 பயணிகளை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.  இதில் இவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில்களை அளித்து உள்ளனர்.

அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், பேஸ்ட் போல் தங்கங்களை உருக்கி மலக்குடல் பகுதியில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.  கால் சட்டை பகுதியில் 6 துண்டுகளாக உடைத்து தங்கங்களை மறைத்து வைத்துள்ளனர்.

இதன்படி, மொத்தம் 3.46 கிலோ எடை கொண்ட ரூ.1.75 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  இதுதவிர, ரூ.25 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட லேப்டாப்புகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.  அவர்கள் 5 பேரையும் கைது செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்