கலப்பு திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கு பெற்றோர் விருப்பத்தின்படி சாதிச் சான்றிதழ் - அரசாணை வெளியீடு

கலப்பு திருமணம் செய்த பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-02-12 04:57 GMT
சென்னை,

தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவ்வப்போது அரசு சலுகைகளை விரிவாக்கம் செய்து வருகிறது. கலப்பு திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தையை, அதன் பெற்றோர் முடிவு செய்வதற்கு ஏற்ப, தந்தை அல்லது தாயின் சமுதாயத்தை சேர்ந்ததாக அறிவிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், கலப்புதிருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு தந்தை அல்லது தாயின் சாதியின் அடிப்படையில் சான்றிதழ் அளிக்கும்படி அரசுக்கு பெற்றோரிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.

அதை அரசு கவனமுடன் பரிசீலித்தது. கலப்புதிருமணத்தில் இணைந்த, வெவ்வேறு சாதியை சேர்ந்த தந்தைக்கும்- தாய்க்கும் பிறக்கும் குழந்தையின் சாதியை, அதன் பெற்றோரின் அறிவிப்புக்கு ஏற்ப பரிசீலிக்கலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, பெற்றோரின் அறிவிப்பின் அடிப்படையில், அவர்களின் தகுதிக்கு ஏற்ப, குழந்தைக்கான சாதிச்சான்றிதழை (பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகப் பிற்படுத்தப்பட்டோர் அல்லது இதர பிற்படுத்தப்பட்டோர் அல்லது எஸ்.சி, எஸ்.டி. ஆகியவை) வருவாய் அதிகாரிகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்