எம்.டெக். படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க சுப்ரீம் கோர்ட்டை அணுக மறுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் ஐகோர்ட்டு கடும் கண்டனம்

எம்.டெக். படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க சுப்ரீம் கோர்ட்டை அணுக மறுத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2021-02-12 20:15 GMT
சென்னை, 

எம்.டெக். பயோ டெக்னாலஜி, எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு முதுநிலை படிப்புகளுக்கு இடஒதுக்கீடு பிரச்சினை காரணமாக இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை ரத்து செய்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது.

அதை எதிர்த்து பி.டெக். பட்டதாரி சித்ரா உள்ளிட்ட மாணவர்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தனர். அந்த வழக்குகளை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்து வருகிறார். விசாரணையின்போது, இந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது ஏன் என்று விளக்கம் அளிக்க பல்கலைக்கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஒப்புதல் அளிக்க முடியாது

இந்த நிலையில் இவ்வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு நேற்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) சார்பில் ஆஜரான மத்திய அரசு மூத்த வக்கீல் ரபுமனோகர், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கடந்த டிசம்பர் 31-ந் தேதிக்குள் இந்த 2 படிப்புகளுக்கும் ஏ.ஐ.சி.டி.இ.யிடம் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். காலஅவகாசம் முடிந்துவிட்டதால், இந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த ஒப்புதல் அளிக்க முடியாது. ஆனால், இந்த 45 இடங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற வருகிற 28-ந் தேதி வரை அவகாசம் உள்ளது’ என்று கூறினார்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் ஏ.சரவணன், ‘அண்ணா பல்கலைக்கழகம் 2 பட்ட மேற்படிப்புகளையும் ரத்து செய்திருப்பது அதிர்ச்சிக்குரியது. வேண்டுமென்றே இந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை ரத்து செய்து ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டு மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கியுள்ளது’ என வாதிட்டார்.

துணைவேந்தர் ஆலோசனை

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘அரிதிலும் அரிதான சூழலை கருத்தில்கொண்டு இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகமோ அல்லது தமிழக அரசோ ஏன் சுப்ரீம் கோர்ட்டை நாடி தீர்வு காணக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பி, இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளிக்க விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.

பிற்பகலில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அண்ணா பல்கலைக்கழக தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயகுமார், ‘சுப்ரீம் கோர்ட்டை அண்ணா பல்கலைக்கழகம் அணுகுவதில் சிக்கல் உள்ளது. ஏ.ஐ.சி.டி.இ., நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டை நாடலாம். மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ., தலைவருடன் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கலந்தாலோசித்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளிக்க விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும்’ என்றார்.

விளக்கம் வேண்டும்

அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, ‘இரண்டு மேற்படிப்புகளும் சர்வ சாதாரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகத்தின் மீது தவறு உள்ளது. இதுகுறித்து விரிவான உத்தரவை ஏன் பிறப்பிக்கக்கூடாது? இப்போது சுப்ரீம் கோர்ட்டை அணுகாமல், ஏ.ஐ.சி.டி.இ.யை நாடவேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது’ என்றார். பின்னர், இந்த வழக்கை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்று அண்ணா பல்கலைக்கழக தரப்பில் தகுந்த விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்