கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்திய பெண் கைது பரபரப்பு வாக்குமூலம்

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பச்சிளம் குழந்தையை கடத்திய இளம்பெண் கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2021-02-15 01:17 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விசூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி பாக்கியலட்சுமி (வயது 24). இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பாக்கியலட்சுமி பிரசவத்திற்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் அந்த குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடலூர் அடுத்த டி.குமராபுரத்தை சேர்ந்த பெயிண்டர் சிலம்பரசன் மனைவி நர்மதா (19) என்பவர் கடத்திச் சென்றார்.

பெண் கைது

இதையடுத்து போலீசார் துரிதமாக செயல்பட்டுபுதுச்சேரி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்த நர்மதாவை கைது செய்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கூறியிருப்பதாவது:-

நானும், சிலம்பரசனும் காதலித்து கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். ஆனால் எங்களுக்கு குழந்தை இல்லை. ஏற்கனவே ஒரு முறை கர்ப்பமாகி, கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது. பின்னர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மீண்டும் கர்ப்பமாக இருந்தேன். அதுவும் கலைந்து விட்டது. ஆனால் அதை வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிக்கவில்லை.

எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று யாரும் கூறி விடக்கூடாது என்பதற்காக நான் கர்ப்பமாக இருப்பதாக நடித்தேன். இதை கணவர் உள்பட அனைவரும் நம்பி விட்டனர். இதையடுத்து 5-வது மாத சீர்வரிசை விழா நடத்தினோம். அதன்பிறகு பாகூருக்கு வந்து விட்டோம். இருப்பினும் சிலர் என்னிடம் வயிறு பெரிதாக இல்லையே ஏன்? என்று கேட்டனர். அவர்களிடம் சத்து குறைபாடு இருப்பதாக கூறி சமாளித்தேன்.

நம்ப வைக்க திட்டம்

இருப்பினும் இதை நம்ப வைக்க அடிக்கடி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என்று கணவரிடம் பணம் வாங்கி வந்தேன். இதற்கிடையில் 10 மாதம் ஆன நிலையில் குழந்தைக்கு என்ன செய்வது என்று யோசித்த போது, அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்தி, அதை தன்னுடைய குழந்தை தான் என்று அனைவரையும் நம்ப வைத்து விடலாம் என்று திட்டமிட்டேன்.

அதன்படி சம்பவத்தன்று கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக வந்ததாக பாக்கியலட்சுமி, அவரது மாமியார் ஆகியோரை நம்ப வைத்து பேசினேன். அதை அவர்களும் நம்பி விட்டனர். அதன்படி பாக்கியலட்சுமி தனியாக இருந்த போது, குழந்தையை மாமியார் வாங்கி வருமாறு கூறியதாக கடத்தி சென்றேன். ஆனால் போலீசார் என்னை கண்டுப்பிடித்து கைது செய்து விட்டார்கள் என்றார். இதையே வாக்குமூலமாக அவர் கொடுத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்