ஐ.ஐ.டி.களில் நடைபெற்ற சமூக அநீதிகள் குறித்து விசாரணை மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு விவகாரம்: ஐ.ஐ.டி.களில் நடைபெற்ற சமூக அநீதிகள் குறித்து விசாரணை மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2021-02-15 01:41 GMT
சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஐ.ஐ.டி. உள்ளிட்ட இந்தியாவின் புகழ்பெற்ற ஐந்து ஐ.ஐ.டிகளில் முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மிகப்பெரிய சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினரை புறக்கணித்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு 72.10 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

இந்தியா முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி.களில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட காலம் முதல் இப்போது வரை ஒட்டுமொத்தமாக வழங்கப்பட வேண்டிய 49.50 சதவீதம் இடஒதுக்கீட்டுக்குப் பதிலாக வெறும் 12 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் நியமனம், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். இதற்காக பொதுத் தேர்வாணையத்தை அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற பேராசிரியர்கள் நியமனம், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கை ஆகியவை குறித்தும், அதில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு ஐ.ஐ.டி. நிர்வாகங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். ஐ.ஐ.டி.களில் நடைபெற்ற சமூக அநீதிகள் குறித்து விசாரணை நடத்தி அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்