சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் மின்தடையால் அண்ணா பல்கலைக்கழக தேர்வை எழுத முடியாமல் தவிக்கும் மாணவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்படுவதால் அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்படுவதால், தேர்வு முடியும் வரை மின்தடை ஏற்படாமல் இருக்க அமைச்சர் பி.தங்கமணி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-02-17 02:24 GMT

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்தன. கல்லூரிகளில் மே மாத செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே சென்றதால் கல்லூரி தேர்வுகள் நடத்துவது குறித்து அச்சம் ஏற்பட்டது.

இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் அரியர் பாடங்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வு எழுத விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அது பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விதிகளுக்கு முரணானது என கூறி சிலர் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டு தலையிட்டு, மாணவர்களுக்கு தேர்வு அட்டவணையை வெளியிட்டு தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அறிவுறுத்தியது.

மின்வெட்டால் மாணவர்கள் தவிப்பு

அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்தி வருகிறது. பெரும்பாலான மாணவர்கள் வீட்டில் இருந்தபடி கணிணி மூலம் தேர்வுகளை எழுதி வருகின்றனர். இந்தநிலையில் சென்னையின் புறநகர் பகுதிகளில் திடீர் திடீரென மின்தடை ஏற்படுகிறது. சிறிது நேரத்தில் மின்சாரம் திரும்ப வந்துவிட்டாலும், அண்ணா பல்கலைக்கழகத்துடனான இணையதள இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடுவதால் தேர்வை எழுத முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.

அமைச்சர் தங்கமணிக்கு கோரிக்கை

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதும் பொறியியல் மாணவ, மாணவிகள் கூறியதாவது:-

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் குடும்பத்துடன் சென்னையின் புறநகர் பகுதிகளில் வசித்து வருகிறோம். நாங்கள் ஆன்லைன் வாயிலாக தேர்வு எழுதும்போது திடீரென ஏற்படும் மின்தடையால் தொடர்ந்து தேர்வை எழுத முடியாத நிலை உண்டாகிறது. எங்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகளின்போது மின்தடை தவிர்க்கப்படுவது போல், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் தேர்வுகள் முடியும் வரை சென்னையின் புறநகர் பகுதிகளில் மின்தடை ஏற்படாமல் இருக்க தமிழக அரசும், மின்சார வாரிய துறை அமைச்சர் பி.தங்கமணியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

 

மேலும் செய்திகள்