திருச்செந்தூர் அருகே விசைப்படகில் எந்திரக்கோளாறு: கடலில் தத்தளித்த 22 மீனவர்கள் மீட்பு

திருச்செந்தூர் அருகே விசைப்படகில் ஏற்பட்ட எந்திரக்கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த 22 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Update: 2021-02-19 02:41 GMT
எந்திரக்கோளாறு
தூத்துக்குடி மாவட்டம் வெள்ளப்பட்டி மீனவ கிராமத்தை சேர்ந்த இருதயஞான செல்வம் என்பவரது விசைப்படகில் 22 மீனவர்கள் அதிகாலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

காலை 6.50 மணியளவில் திருச்செந்தூரில் இருந்து 7 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்றபோது திடீரென்று எந்திரக்கோளாறு காரணமாக விசைப்படகு நின்றது. நீண்டநேரம் மீனவர்கள் முயன்றும் எந்திரத்தில் ஏற்பட்ட பழுதை நீக்க முடியவில்லை.

கடலில் தத்தளிப்பு
இதனால் அந்த மீனவர்கள் கரைக்கு திரும்ப முடியாமல் கடலில் தத்தளித்தனர். இதுகுறித்து சென்னையில் உள்ள கடலோர காவல் பாதுகாப்பு குழுமத்துக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக குலசேகரன்பட்டினம் கடலோர ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த போலீசாரின் வேண்டுகோளுக்கிணங்க கல்லாமொழி அனல்மின் நிலையத்தில் உள்ள ஐ.டி.டி. நிறுவனத்திற்கு சொந்தமான எபநேசர் என்ற விசைப்படகு கொண்டு செல்லப்பட்டு, பழுதடைந்த படகுடன் கயிற்றால் இணைத்து கட்டப்பட்டு இழுத்து வரப்பட்டது. இதன்மூலம் மீனவர்கள் பத்திரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

மேலும் செய்திகள்