மதுராந்தகம் அருகே காரை ஏற்றி மனைவியை கொன்ற டாக்டர்; தப்பிச் சென்றபோது விபத்துக்குள்ளாகி படுகாயம்

மதுராந்தகம் அருகே தனது மனைவியின் கழுத்தை அறுத்ததுடன் அவர் மீது காரை ஏற்றி டாக்டர் கொன்றார். தப்பிச்சென்ற போது கார் விபத்துக்குள்ளானதால் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-02-19 19:32 GMT
கொலை செய்யப்பட்ட கீர்த்தனாவுடன் கணவர் கோகுல்குமார்.
காரை ஏற்றிக்கொலை
சென்னையை அடுத்த பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் கோகுல் குமார் (வயது 40). கோவையை சேர்ந்தவர். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுராந்தகத்தை அடுத்த ஆனந்தா நகரை சேர்ந்த முரஹரி என்பவரது மகள் கீர்த்தனா (35) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. கீர்த்தனா மேல்மருவத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வந்தார்.

கணவர், மனைவி இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது. இதனால் கீர்த்தனா தன்னுடைய தாய் வீட்டில் இருந்தார். நேற்று மாலை அங்கு சென்ற கோகுல்குமார் கீர்த்தனாவின் கழுத்தை கத்தியால் அறுத்து அவரை கீழே தள்ளி காரை ஏற்றி கொன்று விட்டு மாமனார் முரஹரி மற்றும் மாமியார் குமாரி ஆகியோரை கத்தியால் வெட்டிவிட்டு காரில் தப்பிச்சென்றார்.

விபத்தில் படுகாயம்
மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் சுங்கச்சாவடி அருகே செல்லும்போது தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்தது. தகவல் அறிந்த அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் படுகாயம் அடைந்த கோகுல் குமாரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். விசாரணையில் கோகுல்குமார் தனது மனைவியை காரை ஏற்றி கொன்றது தெரியவந்தது.

தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். படுகாயம் அடைந்த முரஹரி மற்றும் அவரது மனைவி குமாரி ஆகியோர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்