சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டி? மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டி? என்பது குறித்து மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

Update: 2021-02-19 21:31 GMT
தூத்துக்குடியில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல்காந்தி பிரசாரம்
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ராகுல்காந்தி வருகிற 27, 28, மார்ச் மாதம் 1-ந் தேதி ஆகிய 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி மக்கள் செல்வாக்குடன் காங்கிரஸ் அரசை நடத்துவார். வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் என்று மோடி கூறுகிறார். விவசாயத்தை கார்ப்பரேட்டுகளிடம் கொண்டு சேர்ப்பதற்காக சட்டம் கொண்டு வரப்பட்டு இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள். அதனை உறுதிப்படுத்தும் வகையில் அரசின் வரவு செலவு 
திட்டத்தில் விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை குறைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளை கேட்பது? என்பதை காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு கூடி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை கூட்டம்
தொடர்ந்து தென்மாவட்டங்களுக்கு ராகுல்காந்தி வருகை குறித்த ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி யெலாளர் ஸ்ரீவல்லபிரசாத், சட்டமன்ற கொறடா கே.ஆர்.ராமசாமி, பொருளாளர் ரூபி மனோகரன், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் வரவேற்றார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாநில செயலாளர் விஜய் வசந்த், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்