நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்

தரங்கம்பாடி தாலுகாவில் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. மழையில் நனைவதால் விரைவில் கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2021-02-21 20:19 GMT
பொறையாறு:
தரங்கம்பாடி தாலுகாவில் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. மழையில் நனைவதால் விரைவில் கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். 
அறுவடை பணி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளான தரங்கம்பாடி, பொறையாறு, காட்டுச்சேரி, தில்லையாடி, திருக்களாச்சேரி, இலுப்பூர், சங்கரன்பந்தல், விசலூர், திருவிடைக்கழி, மேமாத்தூர், கீழமாத்தூர், செம்பனார்கோவில், கீழையூர், ஆறுபாதி, திருவிளையாட்டம், நல்லாடை, உள்ளிட்ட பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
சில இடங்களில் அறுவடை எந்திரம் மற்றும் ஆட்கள் தட்டுப்பாடு காரணமாக அறுவடை பணி காலதாமதமாக நடைபெற்று வருகிறது. நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. 
மழையில் நனைந்து விட்டன
இந்தநிலையில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அந்தந்த பகுதியில் திறக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்துள்ளனர். கொள்முதல் நிலையங்களில் சாக்கு மற்றும் ஆட்கள் தட்டுப்பாட்டாலும், லாரி பிரச்சினையாலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன.
 நெல் மூட்டைகளை விவசாயிகள் பனி பொழிவில் இருந்து ‌பாதுகாத்து வந்தனர். இந்தநிலையில் திடீரென மழை பெய்ததால் நெல் மூட்டைகள் நனைந்து விட்டன. மூடி வைப்பதற்கு போதிய அளவு தார்ப்பாய் மற்றும் படுதா இல்லாமல் விவசாயிகள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். 
முளைத்து விடுமோ...
புரெவி புயலால் ஏற்பட்ட மழையால் வயலில் நெல்மணிகள் முளைத்து பெரும் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், எஞ்சிய நெற்பயிரை அறுவடை செய்து, நெல் மூட்டைகளை நேரடி கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்துள்ளனர். சாக்கு தட்டுப்பாட்டால், நேரடி கொள்முதல் நிலையங்களில் விரைவில் நெல்லை கொள்முதல் செய்யாததால் தற்போது பெய்த மழையால் நெல் மூட்டைகள் நனைந்து விட்டன. இதனால் மீண்டும் நெல் முளைத்துவிடுமோ என அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். 
எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி இருக்கும் அனைத்து நெல்மூட்டைகளையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
திருக்கடையூர்
திருக்கடையூர் சுற்றுப்பகுதியில் சம்பா நெல் அறுவடை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய திருக்கடையூர், கிள்ளியூர், மாமாகுடி உள்ளிட்ட பல கிராம பகுதிகளில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. 
விவசாயிகள், நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்துள்ளனர். தற்போது பெய்த மழையால் அடுக்கி வைத்துள்ள நெல் மூட்டைகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் நெல் முளைத்து விடுமோ என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.
கொள்ளிடம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் மிதமான மழை பெய்தது. இதனால் மழைநீர் வயல்களில் தேங்கியது. இதனால் அறுவடை செய்து வயல்களில் கிடக்கும் வைக்கோல் மழையால் நனைந்தது. வயலில் அறுவடை பணியும் முடங்கியது. அறுவடை செய்த நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைத்துள்ளனர். அந்த மூட்டைகள் திடீர் மழையால் நனைந்து விட்டன. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்