ஆட்டோவை பறிமுதல் செய்ததால் விரக்தி: நெல்லையில் நிதி நிறுவனத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை

ஆட்டோவை பறிமுதல் செய்ததால் நெல்லையில் தனியார் நிதி நிறுவனத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-02-25 04:25 GMT
ஆட்டோ பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 33). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனம் மூலம் மாத தவணையில் ஆட்டோ ஒன்றை தனது தங்கையின் கணவருக்கு வாங்கி கொடுத்தார். இதில் மூன்று மாதங்கள் கடன் தொகையில் குறிப்பிட்ட பகுதியை கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் கயத்தாறு சென்று ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

நிதி நிறுவனத்தில் தீக்குளிப்பு
இதை அறிந்த பழனிவேல் நேற்று முன்தினம் மாலையில் நிதி நிறுவன அலுவலகத்திற்கு வந்தார். ஊழியர்கள் பறிமுதல் செய்த ஆட்டோவை திருப்பி தருமாறு அவர் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்து உள்ளனர். மேலும் பழனிவேலை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த பழனிவேல் நிதிநிறுவன வளாகத்தில் வைத்து திடீரென தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.இதில் உடல் கருகி படுகாயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சை 
அளித்தும் பலனின்றி பழனிவேல் நேற்று பரிதாபமாக இறந்தார்.

உறவினர்கள் போராட்டம்
இந்தநிலையில், நிதி நிறுவனத்தின் தவறான அணுகுமுறையால் தான் பழனிவேல் தீக்குளித்து தற்கொலை செயத்தாகவும, எனவே நிதி நிறுவனத்தின் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய கோரியும் பழனிவேலின் உறவினர்கள் நேற்று காலையில் அந்த நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்