குரோம்பேட்டை எம்.ஐ.டி. துணை பதிவாளர் கைது வேலை வாங்கித்தருவதாக ரூ.3.29 கோடி மோசடி

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.3.29 கோடி மோசடி செய்ததாக குரோம்பேட்டை எம்.ஐ.டி. துணை பதிவாளரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-03 04:29 GMT
சென்னை, 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த குரோம்பேட்டை எம்.ஐ.டி.யின் துணை பதிவாளர் பார்த்தசாரதி (வயது 59). அரசு அலுவலகங்களில் சூப்பிரண்டு, இளநிலை உதவியாளர், உதவியாளர் மற்றும் மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் போன்ற வேலை வாங்கித்தருவதாக 75 அப்பாவி பட்டதாரி இளைஞர்களிடம் ரூ.3.29 கோடி பணம் வாங்கிக்கொண்டு வேலைக்கான ஆணை என்று போலியான நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றியதாக, அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

சிறை

அதில், பார்த்தசாரதியின் மகன் விஸ்வேஸ்வரன், மற்றும் வள்ளி இளங்கோ, ராமசாமி, இளங்கோவன், ராஜபாண்டி, ஆறுமுகம், ரவீந்திரராஜா, ராஜூ தெய்வசிகாமணி ஆகியோரும் இந்த மெகா மோசடிக்கு உறுதுணையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் பார்த்தசாரதி தவிர மற்ற அனைவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டனர்.

பார்த்தசாரதி தனது மகனுடன் சேர்ந்து இந்த மெகா மோசடியில் நேரடியாக சம்பந்தப்பட்டு இருப்பதை போலீசார் விசாரணையில் உறுதி செய்தனர். அதன்பேரில் நேற்று முன்தினம், குரோம்பேட்டை எம்.ஐ.டி. வளாகத்தில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பார்த்தசாரதியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்