அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம் பா.ஜ.க. தலைவர் முருகன் தகவல்

அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேசி வருவதாக மாநில பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

Update: 2021-03-04 01:28 GMT
சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதுதொடர்பாக அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்தநிலையில் சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில நிர்வாகிகளுடன் பா.ஜ.க. தேர்தல் பார்வையாளர் கிஷன் ரெட்டி, சி.டி. ரவி, சுதாகர் ரெட்டி, மாநிலத்தலைவர் எல்.முருகன் ஆகியோர் ஆலோசனை செய்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், கட்சி போட்டியிடும் தொகுதி எவை என்று இன்னும் முடிவு செய்ய முடியாத நிலை இருப்பதால், கட்சி தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

விவரம் அறிந்தவர்கள்

பின்னர், மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியதாவது:-

அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேசி வருகிறோம். தி.மு.க. எந்த காலத்திலும் ஆட்சிக்கு வராது. மீண்டும் ஆட்சிக்கு வந்து நிலம் அபகரிக்கும் வேலையை தி.மு.க. செய்யும் என்பதை பொதுமக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். எனவே அந்த வாய்பை தி.மு.க.விற்கு பொதுமக்கள் கொடுக்க மாட்டார்கள். தி.மு.க. தோல்வி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஓன்று.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சி.டி.ரவி கூறும் போது, அ.தி.மு.க. உடனான பேச்சுவார்த்தை நல்லமுறையில் உள்ளது. நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். அ.தி.மு.க. தலைவர்கள் விவரம் அறிந்தவர்கள், யாரை சேர்க்க வேண்டும், யாரை விலக்க வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்றார்.

மேலும் செய்திகள்