சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-03-18 10:21 GMT
மதுரை, 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்வராணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது கணவர் ஜெயராஜ். எங்கள் மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரையும் கடந்த ஜூன் மாதம் விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சில போலீஸ்காரர்கள் அழைத்து சென்று, தாக்கியுள்ளனர். கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவர்கள் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு உள்ளனர். படுகாயங்களுடன் என் கணவரும், மகனும் இறந்துவிட்டனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் கைதான போலீஸ்காரர்கள், இந்த வழக்கில் இருந்து விடுபட எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடலாம். பணபலம் காரணமாக சாட்சிகளை மிரட்டி, கலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே மதுரை கோர்ட்டில் நிலுவையில் உள்ள என் கணவர் மற்றும் மகன் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையை குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்து, அதற்குள் வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பளிக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று விசாரணை நடைபெற்று வரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மேலும் செய்திகள்