ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் 3 பேர் பரிதாப சாவு? மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக தகவல்

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் செல்வதில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Update: 2021-04-06 18:06 GMT

கொரோனா நோயாளிகள்

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் பிரச்சினை இருப்பவருக்கு ஆக்சிஜன் அதிகம் தேவைப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று வந்த பிறகு, ஆக்சிஜனுக்கான பயன்பாடு அதிகரித்து உள்ளது.மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் பயன்பாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டன. மருத்துவ பணியாளர்களும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டனர்.

மீண்டும் பாதிப்பு அதிகரிப்பு

அதன்பின்னர், நோயின் தாக்கம் சற்று குறைந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகம் எடுத்து இருக்கிறது.கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக சிகிச்சை அளிப்பதற்கான படுக்கை வசதிகளும் நிரம்பி வருகின்றன.

தீவிர சிகிச்சை பிரிவு

தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 366 பேர் கொரோனா நோய்த் தொற்று மற்றும் அறிகுறி காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதிலும் தீவிர சிகிச்சை பிரிவில் மட்டும் 81 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு ஆக்சிஜன் வென்டிலேட்டர் குழாய் மூலம் முறையாக ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்தது.

3 பேர் உயிரிழப்பு?

நேற்று முன்தினம் இரவு இந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த அறைகளில் உள்ள குழாய்களில் ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக சில நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அதன்பின்னர் சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளுக்கு தேவையான ஆக்சிஜன், குழாய் மூலமாகவே வழங்கப்படுகிறது. அந்த வகையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்ற ஆக்சிஜன் குழாயை யாரோ அடைத்துவிட்டதாகவும், அதனால் குழாய்களில் முறையாக ஆக்சிஜன் சப்ளை செல்வது தடைப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இதனை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜன் திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார். மேலும் 3 பேர் உயிரிழந்ததாக கூறுவது தவறான தகவல் என்றும், அந்த அறைகளில், கொரோனா பாதிப்பு மட்டுமல்லாது மற்ற உடல் பிரச்சினைகளுடன் இருந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து போனதாகவும் அவர் கூறினார்.

குற்றச்சாட்டு

கொரோனா தாக்கம் சற்று குறைந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களை அவர்கள் ஏற்கனவே பணியாற்றி வந்த பணிகளுக்கு மாற்றிவிட்டதாகவும், தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தாலும், அதற்கேற்றாற்போல் மருத்துவ பணியாளர்களை கொரோனா சிகிச்சை வார்டில் அதிகரிக்கவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில், மருத்துவமனை வளாகத்தில் ஊழியர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை அங்கும், இங்குமாக எடுத்து செல்லும் பணிகளில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. மேலும் இதுகுறித்து உடனடியாக மருத்துவமனை வளாகத்தில் டீன் தலைமையில், அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டமும் நடந்தது.

ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்ககத்தின் இயக்குனர் டாக்டர் கே.நாராயணபாபு கூறியதாவது:-

தேவையான அளவை விட அதிக அளவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரு நாட்களுக்கு ஒருமுறை தேவையான ஆகிசிஜன் நிரப்பப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்தது ஆக்சிஜன் குறைபாடு என கூறுவது தவறு. இறந்த நபர்களில் ஒருவர் தனியார் மருத்துவமனையில் இருந்து கடைசி நிமிடத்தில் மிகவும் மோசமான நிலையிலேயே இங்கு கொண்டு வரப்பட்டார்.

பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத நிலையிலேயே அரசு மருத்துவமனைக்கு மாற்றுகின்றனர். ஆனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது என கூற இயலாது. எனவே கடைசி நிமிடங்களில் வருபவர்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கிறோம். அவ்வாறு கொண்டுவரப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவருக்கும் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரும் உடல்நலக்குறைவாலேயே உயிரிழந்துள்ளார். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உயிரிழந்த 2 கொரோனா நோயாளிகளும் உடல்நிலை நலமாக இல்லாத காரணத்தினாலேயே உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் தேரணிராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆக்சிஜன் இணைப்பில் எந்த தடையும் ஏற்படவில்லை. ஆக்சிஜன் சப்ளையில் அழுத்த மாறுபாடு மட்டும் தான் இருந்தது. ஆக்சிஜன் முற்றிலும் தடைப்பட்டு இருந்தால், அங்கு சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் உயிரிழந்து இருப்பார்கள். எனவே இது தவறான தகவல். உயிரிழந்த 2 நோயாளிகளும் ஏற்கனவே பல்வேறு உடல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருந்தனர்’ என்றார்.

மேலும் செய்திகள்