தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது

தமிழக கடல் எல்லைகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2021-04-09 22:25 GMT
கோப்பு படம்
சென்னை,

தமிழகத்தில் கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்தை பெருக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் வருகிற ஏப்ரல் 15-ந்தேதி தொடங்குகிறது. இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன், விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் கிழக்கு, மேற்கு கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலமாக மீன்பிடிப்பதற்கு தமிழக அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

பாரம்பரிய மீன்பிடி படகுகளுக்கு மீன்பிடி தடை காலத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. (ஆழ்கடலுக்கு செல்ல கூடாது. கரையில் இருந்து சில அடி தொலைவுக்குள் பிடிக்கலாம்). எனவே விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலமாக இந்த குறிப்பிட்ட 61 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க கூடாது. கடலுக்கு படகுகளுடன் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் வருகிற 14-ந்தேதி இரவுக்குள் கரை திரும்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை 591 மீன்பிடி கிராமங்கள் உள்ளன. சென்னை காசிமேடு, கடலூர், நாகை, ராமேசுவரம், தூத்துக்குடி, முட்டம் உள்பட துறைமுகங்களில் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டால், இந்த படகுகள் அனைத்தும் கரையோரம் நிறுத்தப்படும். மீனவர்கள் படகுகளை பராமரிப்பது, மீன்வலைகளை பின்னுவது போன்ற வேலைகளில் கவனம் செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்