முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை அதிகாலையில் சைக்கிள் ஓட்டி அசத்திய மு.க.ஸ்டாலின்

சென்னையை அடுத்த முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை அதிகாலை வேளையில் சைக்கிள் ஓட்டி அசத்திய மு.க.ஸ்டாலின், இடையில் சந்தித்த பொதுமக்களிடம் நலம் விசாரித்தார்.

Update: 2021-04-12 00:27 GMT

மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கடுமையான அரசியல் பணிக்கு இடையேயும் அவ்வப்போது சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சி செய்வது வழக்கம். அந்த வகையில், வாரத்திற்கு 2 முறை சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் இருந்து மாமல்லபுரம் வரை அதிகாலை நேரத்தில் சைக்கிளில் செல்வார். ஆனால், தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், கடந்த 3 மாதங்களாக அவரால் சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடியவில்லை. தற்போது, தேர்தல் முடிந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணிக்கு மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்வதற்காக சென்னையை அடுத்த முட்டுக்காட்டிற்கு வந்தார்.

வேகமாக சைக்கிள் ஓட்டினார்

அங்கிருந்து மாமல்லபுரம் நோக்கி அவர் சைக்கிளில் புறப்பட்டார். அவருடன் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், மருமகள் கிருத்திகா உதயநிதி ஆகியோரும் தனித்தனியாக சைக்கிள் ஓட்டி சென்றனர். ஆனால், வயதில் மூத்தவராக மு.க.ஸ்டாலின் இருந்தாலும், அவரே வேகமாக சைக்கிள் ஓட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.

சைக்கிள் ஓட்டும் வீரர் அணியும் உடை, கையுறை, ஹெல்மெட் அணிந்து மு.க.ஸ்டாலின் சென்றபோதும், வழிநெடுகிலும் சாலையில் சென்ற பொதுமக்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டனர். பலர் அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். அவரும் சைக்கிள் ஓட்டியபடியே வணக்கம் தெரிவித்து சென்றார். மேலும், “எப்படி இருக்கீங்க” என்று உடல்நலம் விசாரித்தபடியே அவர் பயணத்தை தொடர்ந்தார்.

எப்போதும் வருவேன்

சைக்கிளிலேயே மாமல்லபுரம் சென்ற மு.க.ஸ்டாலின், பின்பு அதே பாதையில் சைக்கிளில் முட்டுக்காடு திரும்பினார். வழியில், ஒரு சிலர் அவருடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர். மேலும் சிலர், மு.க.ஸ்டாலினிடம், “நீங்கள் தான் தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக வரப்போகிறீர்கள். அதன்பிறகும் இதுபோல சைக்கிளில் வரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர்.

அதற்கு மு.க.ஸ்டாலின், “நான் எப்போதும் வருவேன்” என்று பதில் அளித்தார். வழக்கமாக சைக்கிள் பயணம் மேற்கொள்ளும்போது, வழியில் ஒரு டீக்கடையில் காபி குடிப்பதை மு.க.ஸ்டாலின் வழக்கமாக கொண்டிருந்தார். நேற்றும் அந்த கடையில் காபி குடிப்பதை மு.க.ஸ்டாலின் மறக்கவில்லை. அவர் காபி குடித்த பிறகு மீண்டும் சைக்கிளில் முட்டுக்காடு வந்தடைந்தார். பின்னர், அங்கிருந்து காரில் ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு திரும்பினார்.

மேலும் செய்திகள்