கோவையில் கொரோனா சமூக பரவலா? - சுகாதாரத்துறை அதிகாரிகள் பதில்

கோவையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Update: 2021-04-21 17:29 GMT
கோவை, 

கோவையில் கொரோனா தொற்று சமூக பரவலை அடைந்து உள்ளதா என்பதை கண்டறிய கடந்த ஆண்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் கடந்த 9-ந் தேதி மாநகராட்சியில் 5 இடங்களும், ஊரக பகுதியில் 37 இடங்களிலும் மொத்தம் 1,260 பேரிடம் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. 

இது குறித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 

கோவை மாநகராட்சியில் காந்திபுரம், கே.கே.புதூர், ராமநாதபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் ஆகிய 5 இடங்களில் தலா 30 பேரிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. இதேபோல் ஊரக பகுதியில் ஆனைமலை, வால்பாறை, காரமடை, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பெரியநாயக்கன்பாளையம், மதுக்கரை, இடிகரை உள்ளிட்ட வட்டாரங்களில் 37 இடங்களில் தலா 30 பேரிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது.

இந்த ரத்த மாதிரி அனைத்தும் கோவை ரேஸ்கோர்சில் உள்ள மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள நவீன எந்திரம் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்முடிவுகள் அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.

கோவை தவிர திருப்பூர் மாவட்டத்தில் 27 இடங்கள், நீலகிரியில் 8 இடங்கள், நாமக்கல்லில் 20 இடங்கள், ஈரோட்டில் 26 இடங்களில் தலா 30 பேரிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளும் இங்குதான் பரிசோதனை செய்யப்பட்டு, முடிவுகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்