தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் மக்கள் நல விஷயத்தில் தீவிரமாக செயல்படுவோம் கமல்ஹாசன் பேச்சு

தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் மக்கள் நலம் எனும் விஷயத்தில் மக்கள் நீதி மய்யம் தீவிரமாக செயல்படும் என்று கமல்ஹாசன் பேசினார்.

Update: 2021-04-25 02:02 GMT
சென்னை, 

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இந்த கருத்தரங்கிற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கி, பேசியதாவது:-

பல விஷயங்களில் மக்கள் பங்கேற்பு குறைவாக உள்ளது என்பதை நான் தேர்தல் பிரசார பயணத்தின் போது கண்டேன். ஜனநாயகம் என்பது மோனாலித்திக் கட்டுமானம் அல்ல. ஒருமுறை உருவாக்கி விட்டால் போதும் அப்படியே இருக்கும் என்று நினைத்துக்கொள்ளக் கூடாது. தொடர்ச்சியாக கண்காணித்தால்தான் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கும்.

தேர்தல் முடிவு

நான் போட்டியிட்ட கோவை தெற்குத் தொகுதியில் உள்ள 19 வார்டுகளில் மூன்று வார்டுகள் மிக மோசமான சூழலில் உள்ளன. கல்லுக்குழி, அம்மன்குளம், கோட்டை மேடு போன்ற பல குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளே இல்லாத சூழல் நிலவுகிறது. அவர்களது குடியிருப்புகளை சுற்றி வசிக்கும் பண வசதி படைத்தவர்கள் சிறிது மனம் வைத்தால் கூட இவர்களது வாழ்க்கை சூழலில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரமுடியும். அதை நோக்கிய முயற்சிகளில்தான் நான் ஈடுபட்டுள்ளேன்.

தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் மக்கள் நலம் எனும் விஷயத்தில் மக்கள் நீதி மய்யம் தீவிரமாக செயல்படும் என்பதில் மாற்றமில்லை. இன்னமும் நகர்ப்புறங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதன் காரணமாக 9 மாவட்டங்களில் கிராம உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதை நடத்திக் கொடுக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. அதை நாம் தொடர்ச்சியாக ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்