உள்வாங்கியதால் உருவான இயற்கை அதிசயம் தனுஷ்கோடி கடலுக்குள் 2 கி.மீ. தூரம் உருவான மணல் சாலை

உள்வாங்கியதால் தனுஷ்கோடி கடலுக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மணல் சாலை போன்று உருவாகி, அதன் முடிவில் பிரமாண்ட ரவுண்டானா போன்றும் காட்சி தருகிறது.

Update: 2021-04-30 03:06 GMT
ராமேசுவரம், 

ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதி முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. ராமேசுவரம் வரும் பக்தர்கள் அப்படியே தங்கள் வாகனங்களில் தனுஷ்கோடி சென்று கடலின் அழகை பார்த்துவிட்டுதான் ஊர் திரும்புவார்கள்.

பொதுவாகவே தனுஷ்கோடி கடலானது சீற்றமாகவே காணப்படும். இதனால் கடல் நீரோட்டத்துக்கு ஏற்ப அங்கு நில அமைப்பில் அவ்வப்போது மாறுதல் ஏற்படுவது உண்டு.

தற்போது சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்ல தடை இருப்பதால் தனுஷ்கோடி வெறிச்சோடிதான் காணப்படுகிறது. இருந்தாலும் நேற்று அங்கு ரம்மியமான ஓர் காட்சியை காண முடிந்தது.

அதாவது கடல் உள்வாங்கியதால், கடலின் நடுவே மணல் சாலை தோன்றி, அதன் முடிவில் ஆங்கில எழுத்தான ‘U’ வடிவத்தில் அரிச்சல்முனை ரவுண்டானா போன்று மணல் ரவுண்டானா உருவாகி இருந்தது.

இயற்கை உருவாக்கிய அதிசயம்

இயற்கை உருவாக்கிய இந்த அதிசயம் தனுஷ்கோடி தெற்கு கடல் பகுதியில்தான் நிகழ்ந்துள்ளது. கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடலின் நடுவே இந்த மணல் சாலை சென்றது. ஆனால், கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் தனுஷ்கோடி அரிச்சல்முனையின் தெற்கு கடல் பகுதி, முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்