ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க உதவிக்கரம் நீட்டும் ரிலையன்ஸ் குழுமம்

ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க உதவிக்கரம் நீட்டும் ரிலையன்ஸ் குழுமம் தினந்தோறும் 1,000 டன் உற்பத்தி செய்து மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்குகிறது.

Update: 2021-05-02 22:04 GMT
சென்னை, 

கொரோனாவின் 2-வது அலை நாடு முழுவதும் கோரத் தாண்டவம் ஆடிவரும் நிலையில், ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பல்வேறு தனியார் நிறுவனங்களும் தாங்களாக முன்வந்து மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்து, மத்திய-மாநில அரசுகளிடம் அளித்து வருகின்றன. அந்தவகையில், முகேஷ் அம்பானியை தலைவராக கொண்டு செயல்படும் ரிலையன்ஸ் குழுமம், ஜாம்நகரில் உள்ள ஆலையில் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்து வருகிறது. தனது தொழிற்சாலைகளில் நாள் ஒன்றுக்கு 1,000 டன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்கிறது. இது நாட்டில் உள்ள மொத்த மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் 11 சதவீதத்துக்கும் அதிகம் ஆகும். ரிலையன்ஸ் குழுமம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன், பல்வேறு மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கும். ஜாம்நகர் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான பணிகளையும், அதனை மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கும் பணிகளையும் முகேஷ் அம்பானி தனிப்பட்ட முறையில் இருந்து உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

இதுகுறித்து முகேஷ் அம்பானி கூறுகையில், ‘‘கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து உயிர்களையும் காப்பாற்றுவதை தவிர வேறு எங்களுக்கு எதுவும் முக்கியம் இல்லை. இந்தியாவில் மருத்துவ ஆக்சிஜனின் உற்பத்தியையும், அதனை எடுத்துச் செல்லும் வசதியையும் அதிகப்படுத்த வேண்டியதற்கான அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும் செய்திகள்