எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரை 93 ஆயிரத்து 802 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

Update: 2021-05-03 01:03 GMT
சேலம், 

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அ.தி. மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 3-வது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் சம்பத்குமாரும், அ.ம.மு.க. சார்பில் பூக்கடை சேகரும், மக்கள் நீதி மய்யம் சார்பில் தாசப்பராஜூம், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீரத்னாவும் போட்டியிட்டனர்.

மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் எடப்பாடி மற்றும் வீரபாண்டி தொகுதிகளில் தான் அதிகபட்சமாக 85.64 சதவீத வாக்குகள் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் எடப்பாடி முக்கிய தொகுதியாக கருதப்பட்டது.

வாக்குகள் வித்தியாசம்

எடப்பாடி தொகுதியில் பதிவான வாக்கு எண்ணிக்கை சங்ககிரி அருகே உள்ள வீராச்சிபாளையம் பகுதியில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது. முதல் சுற்றில் இருந்தே எடப்பாடி பழனிசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. உள்ளிட்ட வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். ஒவ்வொரு சுற்று முடிவிலும் அவர் பெற்ற வாக்குகள் வித்தியாசம் அதிகரித்து கொண்டே இருந்தது.

முதல் சுற்றில் எடப்பாடி பழனிசாமி 5 ஆயிரத்து 682 வாக்குகள் பெற்றார். 10-வது சுற்றுகள் முடிவில் 56 ஆயிரத்து 252 வாக்குகளும், 20-வது சுற்றுகள் முடிவில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 475 வாக்குகளும் பெற்றிருந்தார்.

3-வது முறையாக வெற்றி

இறுதிச்சுற்று முடிவில் எடப்பாடி பழனிசாமி 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தப்படியாக தி.மு.க. வேட்பாளர் சம்பத்குமார் 69 ஆயிரத்து 352 வாக்குகள் பெற்று 2-வது இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஸ்ரீரத்னா6 ஆயிரத்து 626 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும் பெற்றனர். எடப்பாடி பழனிசாமி 93 ஆயிரத்து 802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதும் அவர் வெற்றி பெற்றதால் எடப்பாடி தொகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர்கள் உள்பட 26 பேர் டெபாசிட் இழந்தனர்.

வாக்குகள் விவரம்

எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

மொத்த ஓட்டு - 2,85,205

பதிவானவை - 2,47,984

தள்ளுபடி- 686

எடப்பாடி பழனிசாமி

(அ.தி.மு.க.) -1,63,154

சம்பத்குமார் (தி.மு.க.) -69,352

ஸ்ரீரத்னா (நாம் தமிழர் கட்சி)

- 6,626

தாசப்பராஜ் (மக்கள் நீதி மய்யம்)

-1,547

ஜமுனா (சுயே) -815

பூக்கடை சேகர் (அ.ம.மு.க.) -774

கதிரவன் (சுயே) -555

அய்யப்பன் (சுயே) -483

குகேஷ்குமார் (சுயே) -474

கதிரேசன் (சுயே) -407

நோட்டா-1,106

மேலும் செய்திகள்