தமிழகத்தில் தாமரை மலராது என்று சொன்னார்கள்: பா.ஜ.க.வின் சபதம் நிறைவேறியிருக்கிறது எல்.முருகன் அறிக்கை

தமிழகத்தில் தாமரை மலராது என்று சொன்னார்கள்: பா.ஜ.க.வின் சபதம் நிறைவேறியிருக்கிறது எல்.முருகன் அறிக்கை.

Update: 2021-05-03 20:05 GMT
சென்னை, 

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்கிறோம். தமிழகத்தில் தாமரை மலராது என்று சொல்லி கொண்டு இருந்தவர்கள் மத்தியில் 2021-ல் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தை அலங்கரிப்பார்கள் என்று சபதம் ஏற்றிருந்தோம். இன்று அது நிறைவேறி இருக்கிறது.

1996-ல் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் அதன் பிறகு 2001-ல் 4 சட்டமன்ற உறுப்பினரும் இருந்தார்கள். இப்போது 2021-ல் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க பெற்றிருக்கிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்காக பிரசாரங்கள் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கும், அகில பாரத தலைவர் ஜே.பி.நட்டாவுக்கும், மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீத்தாராமன், ராஜ்நாத்சிங், ஸ்மிருதி ராணி, உள்பட அனைத்து தலைவர்களுக்கும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ..பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், மற்றும் அனைத்து தமிழக தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்திட்ட பாரதிய ஜனதா கட்சி, அ.தி.மு.க, பா.ம.க, த.மா.க உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து 76 இடங்களை வழங்கிய தமிழக மக்களுக்கும் தமிழக பா.ஜ.கவின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்