உரிமைகளும், சலுகைகளும் கிடைக்கும்: பத்திரிகை, ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்கள் பட்டியலில் சேர்ப்பு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பத்திரிகை, காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2021-05-04 21:09 GMT
சென்னை, 

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், நர்சுகள், காவல் துறை, உள்ளாட்சி துறை, வருவாய் துறை, சுகாதாரத் துறையை சேர்ந்தவர்கள் முன்களப் பணியாளர்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உரிமைகளும், சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, பத்திரிகை, காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோரும் முன்களப் பணியாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அறிவிப்பை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஊடகத்துறையினர் சேர்ப்பு

மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு 4-வது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன.

கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள்.

சலுகைகள் கிடைக்கும்

செய்தித்தாள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்