குறைந்து வந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் அதன் விலை உயர்ந்து இருக்கிறது.

Update: 2021-05-04 23:59 GMT
சென்னை, 

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற வரைமுறைக்கு கொண்டு வரப்பட்டதில் இருந்து, அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து அதன் விலை ‘கிடுகிடு'வென உயர்ந்து வரலாறு காணாத உயர்வை சந்தித்தது.

அதன்படி, கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி வரை பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் வந்தது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 11 காசுக்கும், டீசல் 86 ரூபாய் 45 காசுக்கும் விற்பனை ஆனது.

மீண்டும் உயர்வு

அதன்பின்னர், விலை சற்று குறையத் தொடங்கியது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் 24, 25 மற்றும் 30-ந்தேதிகளிலும், தொடர்ந்து கடந்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதியிலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருந்தது. அதனையடுத்து விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், கடந்த 18 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் 92 ரூபாய் 43 காசுக்கும், டீசல் 85 ரூபாய் 75 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இப்படியாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டு வந்த நிலையில், நேற்று மீண்டும் விலை உயர்ந்து காணப்பட்டது. பெட்ரோலை பொறுத்தவரையில் லிட்டருக்கு 12 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 92 ரூபாய் 55 காசுக்கும், டீசலை பொறுத்தவரையில் லிட்டருக்கு 15 காசு அதிகரித்து 85 ரூபாய் 90 காசுக்கும் விற்பனை ஆனது.

மேலும் செய்திகள்