10 மணி நேர போராட்டம் தோல்வியில் முடிந்தது கிணற்றின் கரை இடிந்து புதைகுழியில் சிக்கிய சிறுவன் பிணமாக மீட்பு

ராமநாதபுரம் அருகே கிணற்றின் கரை இடிந்து புதைகுழியில் சிக்கிய சிறுவன் 10 மணி நேர போராட்டத்துக்கு பின்பு பிணமாக மீட்கப்பட்டான்.

Update: 2021-05-07 22:13 GMT
ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு மல்லல் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் சுகனேஷ் (வயது 12).

இவன் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் அந்த ஊர் கண்மாயில் குளித்துவிட்டு கண்மாய் கரையில் உள்ள கிணற்று பகுதியில் நின்று தலையை துவட்டி கொண்டிருந்தான். அப்போது கிணற்று கரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து, பூமிக்குள் இறங்கியது. புதைகுழியாக பல அடி ஆழம் கீழே இறங்கியதில் சுகனேஷ் சிக்கினான்.

அவனை அந்த பகுதியில் நின்றவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, எந்திரம் மூலம் தோண்டினர். இரவிலும் மின்விளக்கு வெளிச்சத்தில் மீட்பு பணி நடந்தது.

10 மணி நேர போராட்டம்

சுமார் 10 மணி நேர போராட்டத்துக்கு பின்பு, நேற்று அதிகாலை 2 மணி அளவில் சுகனேஷ் பிணமாக மீட்கப்பட்டான். அதிக ஆழத்தில் சகதிக்குள் சிக்கி இருந்த அவனது உடல் மீட்டு கொண்டு வரப்பட்டது. இந்த காட்சியை கண்டு, அவனது பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.

மேலும் சுகனேசை மீட்கும் பணியின் போது கிராமத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர். அவனது உடல் மீட்கப்பட்டபோது அனைவரும் சோகமயமாகினர்.

மேலும் செய்திகள்